search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எல்.ஐ.சி.-எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு 6-ந்தேதி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
    X

    எல்.ஐ.சி.-எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு 6-ந்தேதி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) மற்றும் இந்தியாவின் பிற வங்கிகளிடமிருந்து ரூ.80 ஆயிரம் கோடி வரை அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது.
    • கார்பரேட்டுகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 5,270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க. நன்கொடை பெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற அரசு நிறுவனங்களில் அதானி குழுமத்தின் ஆபத்தான பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளுக்கு மோடி அரசு உதவியிருப்பது, எல்.ஐ.சி.யின் 29 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் 45 கோடி எஸ்.பி.ஐ. கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட இந்திய முதலீட்டாளர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

    நெருங்கிய நண்பருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு மோடி அரசு நிர்ப்பந்தித்துள்ளது. பெரும் தொகையை அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களில் எல்.ஐ.சி.யின் 39 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் 33 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) மற்றும் இந்தியாவின் பிற வங்கிகளிடமிருந்து ரூ.80 ஆயிரம் கோடி வரை அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது.

    இந்த விஷயத்தில் போராட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. எனவே, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி வருகிற 6-ந்தேதி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கார்பரேட்டுகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 5,270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க. நன்கொடை பெற்றுள்ளது. இத்தகைய ஊழல் பணத்தை சட்டப்பூர்வமாகப் பெற்று, பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.

    இதை அம்பலப்படுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டுப் போராட்டக் களத்தில் விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×