search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோவில்
    X

    அருள்மிகு திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோவில்

    • கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், பேராவூரணியில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்துள்ளது புராதனவனேஸ்வரர் கோவில்.

    கி.பி 7-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் கால கட்டிட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்றவை உள்ளன. இக்கோவிலில் திருச்சுற்று மாளிகை காணப்படுவது கூடுதல் சிறப்பு. முன்மண்டபத்தில் இரு சிற்பங்கள் அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறது.

    கல்வெட்டு செய்திகள்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பாண்டியர், சோழர், நாயக்கர் கால கல்வெட்டுகளும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு ஆகும். இதன் காலம் கி.பி.878 ஆகும். இக்கல்வெட்டு வரிகள் மிகவும் சேதமடைந்துள்ளது. இருப்பினும் மன்னன் பெயரும், ஊரின் பெயரும் தெளிவாக உள்ளது. இதில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என காணப்படுகிறது.

    அடுத்ததாக முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 936 ஆகும். இதுவும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் இறைவனை திருச்சிற்றேமத்து மகாதேவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பராந்தக சோழனின் மற்றொரு கல்வெட்டில் நக்கநாச்சி என்பவர், தன் மகளின் சார்பாக கோவிலுக்கு 95 ஆடுகளை தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது.

    நிலம் கொடை

    முதலாம் ராஜராஜனின் கல்வெட்டும் இக்கோவிலில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 995. இக்கல்வெட்டு இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு வாழ்வூரை சேர்ந்த பூடி உத்தமன் இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் கொடையளித்த செய்தியை காட்டுகிறது.

    முதலாம் ராஜேந்திரன் காலத்து கல்வெட்டு ஒன்றும் கோவிலில் உள்ளது. இதன் காலம் கி.பி.1016 ஆகும். இதில் கோவிலில் அந்தி விளக்கு ஏற்பாடு செய்த செய்தி காணப்படுகிறது.

    முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 1216. இதில் புராதனவனேஸ்வரருக்கு தேவதானமாக 100 பணத்திற்கு சாமந்த மழவராயன் என்பவன் நிலம் விற்ற செய்தி காணப்படுகிறது.

    மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டில், திருச்சிற்றேமம் குளத்துக்கு நீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க நிலம் வழங்கிய செய்தியும், மற்றொரு கல்வெட்டில் இறைவிக்கு அமுது படைக்க நிலம் வழங்கிய செய்தியும் உள்ளது. இதில் நிலம் வழங்கிய நபர், மலை மண்டலத்து குலமுக்கிலை சேர்ந்த குதிரை வியாபாரி குலோத்துங்க சோழன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1253 ஆகும்.

    மற்றொரு கல்வெட்டில் நெடுவாசலை சேர்ந்த உடையான் அறங்காவலர்(என்ற) குதிரை ஆண்டார் என்பவர் நிலம் தானம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. இக்கோவிலின் ஒரு தூண் கல்வெட்டில் அந்த தூண் தானம் வழங்கியவா் மிட்டான் ராமன், மடையால் புரையூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாடல் பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் சிற்றேமம் உடைய என பாடியுள்ளார். இது இத்தலமான திருச்சிற்றம்பலத்தையே குறிக்கும். ஆனால், இப்பதிகத்துக்கு உடைய கோவில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள சித்தாமூரில் அமைந்துள்ள பொன்வைத்தநாதர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கோவிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் அவ்வூரின் பெயர் சிற்றாய்மூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் இல்லை என்பது உறுதியாகிறது.

    மேலும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் இக்கோவிலையே குறிக்கிறது என்றும் இத்தலம் பாடல் பெற்ற தலம் என்பதும் உறுதியாகிறது.

    திருமண தடை நீக்கும்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் பூ விழுங்கி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர். இங்கு பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாக 12 நாள் திருவிழா, மாசி மகம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்கள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வமாக பெரியநாயகி அம்மனையும், புராதனவனேஸ்வரையும் வணங்கி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகிறது. இதுவே ஒரு கோவிலின் சிறப்பை அனைவருக்கும் பறைசாற்றும். திருமணத்தடை நீக்கும் தலமாகவும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    குடமுழுக்கு

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரா் கோவில் தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை. கோவிலில் இருந்த திருத்தேர் சேதம் அடைந்ததை தொடர்ந்து கிராம மக்களின் பங்குத்தொகை மற்றும் அரசு வழங்கிய நிதி உதவியுடன் சேர்த்து தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தேர் இன்னும் வெள்ளோட்டம் விடப்படாமல் கடந்த 6 வருடங்களாக அப்படியே நிலைத்தடத்தில் உள்ளது. மேலும் கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் சேதமடைந்து வருவதுடன், கோவிலின் வர்ண பூச்சுகளும் பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நாள் வரை வேறு கொடிமரம் நடப்படவில்லை.

    திருப்பணிகள்

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெறவில்லை. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்குளக்கரையில் பக்தர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லாததால், அதனை உயர்த்தி வழங்கி திருப்பணி வேலைகளை தொடங்கி முடித்து குடமுழுக்கு விழாவையும், திருத்தேர் வெள்ளோட்டமும் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து 15 கி.மீ்ட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தை அடைந்து புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். அல்லது சென்னையில் இருந்து ரெயில் அல்லது பஸ் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    Next Story
    ×