search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நீங்க சிறந்த தந்தையாக இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க...
    X

    நீங்க சிறந்த தந்தையாக இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க...

    • பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
    • தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும் ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் சிறப்பான தந்தையாக விளங்க பின்பற்ற வேண்டிய அடிப்படை குணங்கள் இவை..

    நிபந்தனை இல்லாத அன்பு: தந்தை தன் பிள்ளைகளிடம் காண்பிக்கும் அன்பும், பாசமும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாததாகவும், நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும்படி அமைய வேண்டும். பிள்ளைகள் பாதுகாப்பாக, சுதந்திரமாக வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் செய்யும் சின்ன சின்னச் செயல்களையும் மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். இவை சிறந்த தந்தைக்கான அடையாளங்களாக அமையும்.


    பொறுமை: ஒவ்வொரு தந்தைக்கும் நிச்சயம் இருக்க வேண்டிய குணம் பொறுமை. குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். அவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு சட்டென்று கோபத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது. அது தந்தை மீதான அவர்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். தந்தையிடம் பேசுவதற்கு பயமும், அச்ச உணர்வும் மேலோங்கக்கூடும். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்வதற்கு தந்தை தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம்.

    ஊக்கம்: சிறந்த தந்தையானவர் பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களையும் நேரடியாக கண்காணித்து ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார். படிப்பிலோ, விளையாட்டிலோ சிறந்து விளங்கும்போது வாழ்த்து கூறி உற்சாகப்படுத்த வேண்டும். உடனுக்குடன் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து பாராட்ட வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் தோல்வியை தழுவினால் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அடுத்த செயலை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

    நம்பகத்தன்மை: நெருக்கடியான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எத்தகைய நிலையிலும் தந்தை தனக்கு பக்கபலமாக இருப்பார் என்ற நம்பகத்தன்மையை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். அதற்கேற்ப தந்தையின் செயல்பாடு அமைந்திருக்க வேண்டும். குழந்தையின் தேவை அறிந்து தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும் நபராகவும் விளங்க வேண்டும். அது தந்தை மீது பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.


    முன்மாதிரி: தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். நேர்மையுடன் செயல்பட வேண்டும். இரக்க குணம் படைத்தவராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதனை பார்த்து பிள்ளைகளும் நல்ல குணாதிசயம் கொண்டவர்களாக வளர்வார்கள்.

    கேட்கும் திறன்: சிறந்த தந்தைக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணாதிசயங்களுள் ஒன்று பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. அவர்களின் உணர்வுகள், யோசனைகள், சிந்தனைகள், கவலைகள் என ஒவ்வொரு நிலைப்பாட்டையும் கண்காணித்து அவர்களை வழிநடத்த வேண்டும். எந்த நேரத்தில் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    பங்கேற்பு: குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவரே சிறந்த தந்தையாக இருக்க முடியும். பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவது, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் தவறாமல் கலந்து கொள்வது என பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அது தந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்தும்.

    ஒழுக்கம்: சிறந்த தந்தை ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அவரின் நடத்தையிலும், செயலிலும் அது வெளிப்பட வேண்டும். தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    Next Story
    ×