என் மலர்
டெல்லி
- மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது
புதுடெல்லி:
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலை மக்களவை செயலகம் கடந்த ஜனவரி மாதம் தகுதி நீக்கம் செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து முகமது பைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து ஜனவரி 25ம் தேதி உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி. முகமது பைசல் மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபிறகும், தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறவில்லை என முகமது பைசல் தனது மனுவில் கூறி உள்ளார்.
தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யாததால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- ராகுல் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
- தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை?
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறிய ராகுல் காந்தி, தன்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன் என பேட்டி அளித்தார். மேலும், பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள், அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதாகவும், அவ்வாறு பேசியதன் எதிரொலியை உணருவதாகவும் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
2019ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. பிரச்சினையை திசைதிருப்ப முயற்சிக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். அப்படி பேசுவதற்கு அவருக்கு உரிமை இருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தை அணுகவும் உரிமை இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
ராகுல் காந்தி வேண்டுமென்றே ஓபிசி பிரிவினரை அவமதித்துள்ளார். அதை பாஜக கண்டிக்கிறது. அவருக்கு எதிராக பாஜக தீவிர போராட்டம் நடத்தும்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை? தங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இடைக்கால தடை வாங்கினார்கள். ராகுல் காந்தியின் வழக்கில் வழக்கறிஞர்கள் ஏன் மவுனமாக இருந்தனர்? இது, ராகுல் காந்தி தன் பதவியை தியாகம் செய்ததுபோன்று காட்டி, அதன்மூலம் கர்நாடக தேர்தலில் பயனடைவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட யுக்தி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
- வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும்.
புதுடெல்லி:
மோடி என்ற சமூகத்தின் பெயரை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.
அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒருமாத காலத்துக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவை செயலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பொதுநல மனுவில், "வழக்குகளில் தண்டனை பெற்றவுடன் உடனடியாக தகுதி நீக்கம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) சட்ட விரோதமானது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். எம்.பி.-எம்.எல்.ஏ.க்களை உடனே தகுதி நீக்கம் செய்யக்கூடாது" என்று கூறப்பட்டு உள்ளது.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,604-ஆக இருந்தது. அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில்,
* கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.
* கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
* கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது.
- அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
புதுடெல்லி:
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
* பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை.
* அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
* பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
* பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது.
* தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
* தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது.
* அதானி பிரச்சனையை திசை திருப்ப நாடகம்.
* பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன்.
* அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது?
* மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன்.
* அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன.
* அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது.
* பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து பாரளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.
* ஒருபோதும்வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை.
* அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது.
* எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
* நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
* நான் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
- தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. உடனடியாக வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 11-ந்தேதி விசாரிக்கும் என்று தெரிவித்தது.
- மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது.
- தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் அவர் பங்களாவை காலி செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
2019-ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். இதுபற்றி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கோர்ட்டில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.பூர்னேஷ்மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று முன்தினம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி அவரது பதவியை பறிக்க பாராளுமன்ற செயலகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது.
தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் அவர் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றால் பங்களாவை காலி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
- டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.
அப்போது ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. இதைதொடர்ந்து லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ந்தேதி ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ரெயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது "நாங் கள் எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால் தற்போது நாட்டின் நிலைமை என்னவென்றால் போராடுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதைத் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஏற்கனவே 3 முறை சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இதற்கிடையே இதே வழக்கில் லல்லுவின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இதை தொடர்ந்து மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அவரி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியிடம் சி.பி.ஐ.யும், மகள் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறையும் டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது. டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 910 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249 ஆகவும் இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 30-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,604-ஆக இருந்தது. அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக இன்று ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 343 பேர், குஜராத்தில் 241 பேர், கேரளாவில் 223 பேர், டெல்லியில் 152 பேர், கர்நாடகாவில் 131 பேர், இமாச்சலபிரதேசத்தில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 2 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 910 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 8,601 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றைவிட 674 அதிகமாகும்.
கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் 2 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று பலி எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.
அதாவது மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,824 ஆக அதிகரித்துள்ளது.
- பிரதமர் மோடியை போலவே பூர்னேஷ் மோடியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
- ராகுல் காந்தியின் கருத்துகளால் பிரதமர் மோடி மட்டுமல்ல மோடி சமூகத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டு உள்ளது.
சூரத்:
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரசார பொது கூட்டத்தில் ராகுல் காந்தி எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என்று விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கை காங்கிரசார் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மோடி என்று குறிப்பிட்டதாலே அவரது பதவி இழந்து உள்ளார். இதன் பின்ணனியிலும் ஒரு மோடி இருந்துள்ளார் என்பது தான் விசித்திரம். அவர் பிரதமர் மோடி இல்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் தொகுதி எம்.எல்.ஏ. தான். இவரது பெயர் பூர்னேஷ் மோடி. இவர் தான் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கொடுத்தவர்.
இவருக்கும், பிரதமர் மோடிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. பிரதமர் மோடியை போலவே பூர்னேஷ் மோடியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற டீ விற்பனை செய்தார். மேலும் அன்றாட கூலி வேலையும் செய்து வந்தார்.
கஷ்டத்துக்கு இடையே அவர் 1992-ம் ஆண்டு இளங்கலை சட்டம் படித்து எல்.எல்.பி. பட்டம் பெற்றார். அதன்பிறகு அவர் பாரதிய ஜனதா மீதான பற்றுதல் காரணமாக அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.
சாதாரண தொண்டராக இருந்த அவர் படிப்படியாக உயர்ந்து பா.ஜ.க பூத் கமிட்டி ஒருங்கிணைபாளர் ஆனார்.
பின்னர் அவர் சிறந்த வியாபார தளமாக திகழும் சூரத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட் டார். மேலும் அம்மாநில போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சிவில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்தவர். இவர் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. வகுப்பினரின் முகமாக உள்ளார்.
ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்? என்பது குறித்து பூர்னேஷ் மோடி கூறும் போது, ராகுல் காந்தியின் கருத்துகளால் பிரதமர் மோடி மட்டுமல்ல மோடி சமூகத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டு உள்ளது. இதனால் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததாக கூறி உள்ளார்.