search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளை
    X

    அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளை

    • கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது.
    • மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் கயத்தாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு மனோகரன் என்ற மகனும், சரவணசெல்வி என்ற மகளும் உள்ளனர். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணசெல்விக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பாமா, அவரது மகன் மனோகரன் ஆகிய இருவரும் சரவணசெல்வியை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். நேற்று காலையில் சிங்கராஜ் பணிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து சிங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 48 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது சிங்கராஜ் வேலைக்கு சென்றதையும், அவரது குடும்பத்தினர் சென்னை சென்றதையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×