search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே மேம்பாலம்
    X

    குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே மேம்பாலம்

    • ஆற்றின் கரையில் 2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
    • பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியாத்தம் நகரில் மையப் பகுதியில் உள்ள காமராஜர் பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.

    இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் பல நாட்கள் தொடர்ந்து பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் மற்றும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றின் கரையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜகணபதி நகர் வழியாக மேல்ஆலத்தூர் ரோடு செல்லும் வழியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே நடுவில் செல்லும் கவுண்டன்யா ஆற்றில் தற்போது செயல்படுத்தப்பட உள்ள வெள்ளதடுப்பு கரை மீது அங்கிருந்து நெல்லூர்பேட்டை சேம்பள்ளி கூட்ரோடு வரை வெள்ள தடுப்பு கரை மீது இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகளையும் நேற்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பி.கோபி, குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்யாபொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் பி.யோகராஜ், ராஜேஷ் அரசு வழக்கறிஞர் வக்கீல் எஸ்.பாண்டியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பக்க கரைகளில் தலா இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

    தற்போது புதியதாக ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதே போல் வெள்ள தடுப்பு சுவர் மீது ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவே கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் தொடங்கி சேம்பள்ளி கூட்ரோடு வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு அதன் மீது சாலை அமைக்கவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு இதன் விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக இப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×