என் மலர்
இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் 100 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு
- வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பெங்களூருவில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பெங்களூருவுக்கு வரும் வாகனங்கள், பெங்களூருவை விட்டு வெளியே செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்காக பெங்களூரு நகர் முழுவதும் 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகளும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து விதமான வாகனங்களும் முழுமையாக பரிசோதனை செய்யப்படுவதுடன், அங்கு வரும் வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வடக்கு மண்டலத்தில் 28, தெற்கு மண்டலத்தில் 26, ஒயிட்பீல்டு மண்டலத்தில் 10, வடகிழக்கு மண்டலத்தில் 3, மேற்கு மண்டலத்தில் 19, மத்திய மண்டலத்தில் 16, தென்கிழக்கு மண்டலத்தில் 3, கிழக்கு மண்டலத்தில் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.