search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி- அமித் மால்வியா
    X

    தலைப்பு செய்தியில் இடம்பெற திட்டமிட்ட செயல்: மம்தா பானர்ஜிக்கு பாஜக பதிலடி

    • நமது நாட்டில் தலைப்பு செய்தியில் இடம்பிடிப்பது மிகவும் எளிதானதாகும்- சந்தோஷ்
    • கேமராக்களுக்காக திட்டமிட்டே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்- அமித் மால்வியா

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே பங்கேற்றார்.

    கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாதியிலேயே வெளியேறினார். அப்போது தனக்கு பேசுவதற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்த சம்பவத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மம்தா பானர்ஜி வெளியேறியது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என பாஜக பதில் கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக பொது செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் கூறியதாவது:-

    நமது நாட்டில் தலைப்பு செய்தியில் இடம்பிடிப்பது மிகவும் எளிதானதாகும். முதலில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர் நான் மட்டும்தான் எனச் சொல்ல வேண்டும். பின்னர் வெளியே வந்து, மைக் ஆஃப் செய்யப்பட்டதால் வெளிநடப்பு செய்தேன் எனச் சொல்ல வேண்டும். தற்போது ஒருநாள் முழுவதும் டிவியில் இதுதான் ஒளிபரப்பாகும். வேலை இல்லை. ஆலோசனை இல்லை. இதான் திதி (மம்தா) உங்களுக்கு" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக-வின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா "கேமராக்களுக்காக திட்டமிட்டே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். ஒரு முதல்வர் தீவிரமான ஆட்சிப் பிரச்சனைகளை நாடக நடத்தையாக குறைப்பது வருத்தமளிக்கிறது. அவரது மோதல் அரசியலின் விளைவாக மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×