search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  ஆன்மிகமும் அற்புதங்களும்
  X

  ஆன்மிகமும் அற்புதங்களும்

  • திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மமும் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.
  • பிரபல ஆன்மிகவாதியான காவ்ய கண்ட கணபதிக்கு ஓர் ஆன்மிக சந்தேகம் எழுந்தது.

  சித்துகள் செய்பவர்களைச் சித்தர்கள் என்கிறோம். ஜபம், தியானம், தவம் உள்ளிட்ட ஆன்மிக நெறிகளில் மன ஒருமைப்பாட்டோடு நெடுங்காலம் ஈடுபடும்போது இயற்கை தானாக வழங்கும் ஆற்றல்தான் சித்துகள். இந்த சித்துகளே சில ஆன்மிகவாதிகள் அற்புதங்கள் நிகழ்த்துவதற்குக் காரணமாய் உள்ளன.

  பரமஹம்சருக்கு சந்திரா, கிரிஜா என்ற இரு துறவிகள் சிறிதுகாலம் சீடர்களாக இருந்தார்கள். தேவைப்படும்போது அவர்களின் முதுகில் இருந்து ஒளி புறப்படும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியிருக்கிறார். இவ்விவரம் சாரதானந்தர் எழுதிய குருதேவரின் ஆராய்ச்சி பூர்வமான வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பதிவாகி உள்ளது.

  ஒருமுறை இருட்டு வழியில் பரமஹம்சர் நடக்க நேர்ந்தபோது சந்திரா, கிரிஜா இருவரில் ஒருவர் முதுகைக்காட்டி நிற்க அதிலிருந்து புறப்பட்ட வெளிச்சத்தில் தான் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்ததாகவும் பரமஹம்சர் குறிப்பிட்டுள்ளார்.

  திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மமும் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார். குழுமணி சாஸ்திரிகள் எழுதிய சேஷாத்ரி பரப்பிரும்மம் குறித்த வாழ்க்கை வரலாற்றில் சுவாமிகள் நிகழ்த்திய பல அற்புதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  ஒருநாள், தன்மேல் பாசம் செலுத்திய ஒரு பாட்டியின் இல்லத்திற்குச் சென்ற சேஷாத்ரி பரப்பிரும்மம், 'பாட்டி! உனக்குப் பலவகைப் பட்ட பட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசையா?' என அன்போடு வினவியிருக்கிறார்.

  'நீ என்னென்னவோ மாயமெல்லாம் பண்ணுவியாமே? பார்க்கிறேனே!' என்று அந்த மூதாட்டி சொன்னதும் பரப்பிரும்மம் தன் வேட்டியிலிருந்து ஒரே ஒரு நூலைப் பிரித்தெடுத்து பாட்டி வீட்டுக் கூடத்தில் போட்டிருக்கிறார்.

  மறுகணம் காடை, குருவி, மைனா, மயில், புறா, கொக்கு, கிளி என்று எண்ணற்ற பறவைகள் நூலிலிருந்து தோன்றி கீச்கீச் எனக் கூடம் முழுவதும் சுற்றினவாம்.

  சற்றுநேரம் சென்றதும், 'பார்த்தது போதுமா?' எனப் பாட்டியிடம் கேட்டாராம் பரப்பிரும்மம். பாட்டி சேஷாத்ரி பரப்பிரும்மத்தின்மேல் பாசம் செலுத்தியதால் மிகுந்த மனமுதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  'போதும்டா சேஷாத்ரி! இந்தப் பட்சிகளோட அப்பா அம்மாவெல்லாம் இதுகளைக் காணோம்னு தேட மாட்டாளோ? இதுகளை அந்தந்த இடத்துக்கே அனுப்பிடு!' என்று பாட்டி சொல்ல மறுகணம் இன்னொரு நூலைப் பிரித்துப் போட்டார் சேஷாத்ரி. எல்லாப் பறவைகளும் காட்சியில் இருந்து மறைந்தன என்பது சேஷாத்ரி சுவாமிகள் வரலாற்றில் வரும் ஒரு நிகழ்ச்சி. இதுபோல் பல நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் உண்டு.

  பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் எழுதிய 'நான் கண்ட பெரியார்கள்' என்ற நூலில் அ.ச.ஞா. விந்தையான ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

  சித்தயோக சுவாமிகள் என்ற இலங்கை சுவாமிகள் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தென்பட்ட காட்சியைப் புகைப்பட ஆதாரத்தைச் சொல்லி விளக்கியிருக்கிறார் அ.ச.ஞா. ஒரு மலைமேல் திடீரென ஒரு தேநீர்க் கடையை சித்தயோக சுவாமிகள் தோற்றுவித்த விந்தையையும் பதிவு செய்திருக்கிறார்.

  திகம்பரரான சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரு முகமதிய மன்னனின் அந்தப்புரத்தில் நிர்வாண மேனியுடன் இறைச் சிந்தனையில் தோய்ந்தவராய் நடந்து சென்றார். அந்த மன்னன் சீற்றத்தோடு அவர் கையை வாளால் வெட்டினான். கை வெட்டுண்டு கீழே விழுந்ததையும் உணராது தொடர்ந்து நடந்தார் பிரம்மேந்திரர்!

  அவர் பெரும் சித்த புருஷர் என்பதை உணர்ந்துகொண்ட மன்னன் ஓடோடிச் சென்று அவர் காலடியில் விழுந்து பணிந்தான். அவரை உலுக்கி இந்த உலக நினைவுக்கு அவரை வரவழைத்தான். தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவருக்குத் தான் இழைத்த தீங்கு குறித்த குற்ற உணர்ச்சியில் இருந்து தான் விடுபடும் பொருட்டு அவர் தன்னால் துண்டிக்கப்பட்ட கையை மறுபடி பொருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கதறினான்.

  அதற்கென்ன என்றவாறே கனிவுடன் அவனைப் பார்த்து நகைத்தார் பிரம்மேந்திரர். துண்டிக்கப்பட்ட வலக்கரத்தை இடக்கரத்தால் எடுத்து வலது தோள்பட்டையில் மறுபடி பொருத்திக் கொண்டார். என்ன ஆச்சரியம்! கை முன்போலவே கூடிக் கொண்டது என்கிறது பிரம்மேந்திரரின் திருச்சரிதம்.

  திருப்பூர் கிருஷ்ணன்

  பிரம்மேந்திரர் போன்ற மெய்ஞ்ஞானிகளை வழிபட்டால், நமக்கே நாம் நினைத்ததெல்லாம் கைகூடும்போது, பிரம்மேந்திரருக்கு அவரது துண்டிக்கப்பட்ட கை, கூடாதா என்ன?

  சீரடி பாபா, அன்பர்கள் சாப்பிடக் கொண்டுதரும் பொட்டலங்களில் உள்ள நூலைத் தனியே விரலில் சுற்றி எடுத்து வைத்துக் கொள்வாராம். இரவு நேரங்களில் அதை இரு தென்னை மரங்களின் இடையே கட்டி, நூலில் படுத்து ஆனந்தமாகத் தூங்கி விடுவாராம்!

  இந்த விவரத்தை 'இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்' என்ற தம் நூலில் பதிவு செய்துள்ளார் பிரபல தமிழ் விமர்சகர் க.நா. சுப்பிரமணியம்.

  ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எழுதும் எழுத்தாளர் கே.எஸ். வெங்கட்ரமணி, பால்பிரண்டன் என்ற வெளிதேசத்தவரைப் பரமாச்சாரியாரிடம் கூட்டிச் சென்றார்.

  பால்பிரண்டன் இந்திய ஆன்மீகம் குறித்து ஆராய்ந்து நூலெழுதிய ஆன்மீக அன்பர். இந்தியத் துறவியர்மேல் மட்டற்ற பக்தி உடையவர். பல்வேறு துறவியரைத் தாம் தேடிச் சென்று சந்தித்த அனுபவங்களையெல்லாம் அவர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

  'தனக்கு பரமாச்சாரியார் குருவாய் இருந்து மந்திர உபதேசம் செய்ய இயலுமா?' என்று பால்பிரண்டன் வேண்டியிருக்கிறார். பரமாச்சாரியார் தான் மடாதிபதி என்பதால் மடத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டினருக்குத் தான் மந்திரோபதேசம் செய்வது சாத்தியமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

  திருவண்ணாமலை ரமணர், மடத்தின் தடைகள் இல்லாத மெய்ஞ்ஞானி என்றும் அவரே பால்பிரண்டனுக்கு உபதேசம் செய்யப் பொருத்தமான குரு என்றும் அவரைச் சந்திக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

  பரமாச்சாரியார் சொன்னதை பால்பிரண்டன் முக்கியத்துவம் கொடுத்து ஏற்கவில்லை. தாய்நாடு புறப்படும் அவசரத்தில் இருந்த அவர் விடைபெற்று, தான் தங்கியிருந்த உணவகத்திற்கு வந்து இரவு ஆழ்ந்து உறங்கியிருக்கிறார்.

  அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. பூட்டிய அறையின் உள்ளே பரமாச்சாரியார் காற்று வெளியில் தோன்றிக் காட்சி கொடுத்திருக்கிறார்.

  'அன்பனே! பயணத்தைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள். தவறாமல் நீ ரமணரைப் பார்த்துவிட்டுப் போ!' என்று மறுபடி கட்டளையிட்டிருக்கிறார் மகாசுவாமிகள்.

  பின் அந்தக் காட்சி காற்றில் கரைந்து மறைந்துவிட்டது. தான் கண்டது கனவல்ல எனக் கிள்ளிப் பார்த்து உணர்ந்த பால்பிரண்டன் பிறகு ரமண மகரிஷியைப் போய்ப் பார்த்ததோடு, இந்தச் சம்பவத்தை அப்படியே தன்னுடைய நூலிலும் பதிவு செய்திருக்கிறார்.

  ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் மகாசுவாமிகள் அடியவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த நேரம். அப்போது ஓர் அடியவர் பரமாச்சாரியாரிடம் தம் சந்தேகத்தை நேரடியாகவே கேட்டுவிட்டார்:

  'சுவாமி! பூட்டிய அறைக்குள் பால்பிரண்டன் உறங்கும்போது நீங்கள் காற்று வெளியில் தோன்றி அவரைத் தட்டி எழுப்பினீர்களாமே? ரமணரைப் பார்க்குமாறு அறிவுறுத்தினீர்களாமே? இப்படி பால்பிரண்டன் தன் நூலில் எழுதியுள்ளார். இதெல்லாம் உண்மைதானா?'

  நேரடியான கேள்வி. சுவாமிகள் என்ன சொல்லப் போகிறார்? ஆமாம் என்பாரா? என்னால் அப்படியெல்லாம் தோன்ற முடியும் என்று சராசரி அற்பர்களைப் போல் பெருமையடித்துக் கொள்ள மாட்டாரே அவர்?

  ஆனால் கேள்வி என்று ஒன்று வந்தால் பதில் சொல்லாமல் தப்பிக்கவும் இயலாதே? மகாசுவாமிகளின் பதிலுக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.

  பரமாச்சாரியார் தாம் நிகழ்த்திய அற்புதத்தை உண்டென்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் எல்லோரும் ஏற்கும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகைத்தவாறே எழுந்து சென்றுவிட்டார். பதிலைக் கேட்ட அடியவர்கள் கைகூப்பித் தொழுதார்கள்.

  தம் பெருமையைக் கூடப் புறந்தள்ளி அப்படியொரு பதிலை அவரைத் தவிர வேறு யார்தான் சொல்ல முடியும்? மகாசுவாமிகள் சொன்ன பதில் இதுதான்:

  'அதனாலதான் எப்பவும் சொல்றேன், தூங்கப் போறப்போ நல்லதையே நினைச்சுண்டு தூங்கணும்னு!'

  உயர்நிலை மெய்ஞ்ஞானிகள் தாங்கள் நிகழ்த்திய அற்புதங்களின் மேல் ஒருபோதும் உரிமை கொண்டாடுவதில்லை.

  பிரபல ஆன்மிகவாதியான காவ்ய கண்ட கணபதிக்கு ஓர் ஆன்மிக சந்தேகம் எழுந்தது. அதைத் தீர்க்கக் கூடியவர் ஸ்ரீரமணர் தானே? ஆனால் இப்போது ரமணரைச் சந்தித்து விளக்கம் கேட்கும் வகையில் தாம் திருவண்ணாமலையில் இல்லையே என நினைத்துப் பெருமூச்சு விட்டார் காவ்ய கண்ட கணபதி.

  அடுத்த கணம் அவர் எதிரில் காற்று வெளியில் ஸ்ரீரமணரின் தோற்றம் உருவாகியது. அவரது சந்தேகத்தை விளக்கம் கூறி நிவர்த்தி செய்துவிட்டு அந்தத் தோற்றம் காற்றில் கலந்து மறைந்துவிட்டது. இதைப் பதிவு செய்திருக்கிறார் காவ்ய கண்ட கணபதி.

  அந்த விவரத்தைப் படித்த ஓர் அன்பர், அது எப்போது நிகழ்ந்தது, நாள், நேரம் முதலிய எல்லாவற்றையும் ஸ்ரீரமணரிடம் சொல்லி அப்படி நிகழ்ந்ததா என வினவியுள்ளார்.

  'நீ சொல்லும் நேரத்தில் என்னிலிருந்து ஏதோ ஒன்று கழன்று எங்கோ சென்றது போல நான் உணர்ந்தேன். மற்றபடி வேறு எந்த நினைவும் எனக்கு இல்லை. இதெல்லாம் அவரவர் பக்தி விசேஷத்தால் நேர்கிறதே தவிர, மெய்ஞ்ஞானிக்கும் இதுபோன்ற விஷயங்களுக்கும் சம்பந்தமில்லை!' என்று ரமணர் பதில் கூறியிருக்கிறார்.

  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்கிறது வள்ளுவம். ஆன்மிகத்தின் மேலான சாரம் இதுதான். மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வதே ஆன்மிகவாதியின் லட்சியம்.

  'சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே?' எனக் கேட்கிறார் தாயுமானவ சுவாமிகள். மனத்தை அடக்குவதே ஆன்மிகத்தின் இலக்கு. தூய ஞானிகளைப் பற்றிச் சிந்திப்பதால் நம் மனம் காலப் போக்கில் படிப்படியாகத் தூய்மையடைகிறது.

  தம்மைப் பற்றிய நினைவுகளால் நம் மனத்தைத் தூய்மையடையச் செய்கிறார்களே ஞானிகள், அதனினும் மேலாக அவர்கள் செய்யக்கூடிய அற்புதம் என்பது வேறொன்றுமில்லை. அத்தகைய அற்புதத்தை நம் மனத்தில் ஞானிகள் நிகழ்த்த வேண்டும் என்பதே நம் நிரந்தர வேண்டுதலாக இருக்க வேண்டும்.

  தொடர்புக்கு:

  thiruppurkrishnan@gmail.com

  Next Story
  ×