search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  அதிசயிக்க வைக்கும் அறிவியல் சாதனங்கள்- நெற்றிப்பொட்டில் தூக்கம்!
  X

  அதிசயிக்க வைக்கும் அறிவியல் சாதனங்கள்- நெற்றிப்பொட்டில் தூக்கம்!

  • நாம் தூங்கும்போது நம் உடல் பல புதுப்பித்தல்களைச் செய்து கொள்கிறது.
  • புதுப்பித்தல்தான் தூக்கத்தின் மிக முக்கிய நன்மை.

  அணியக்கூடிய சாதனங்கள் பல்கிப்பெருகி விஞ்ஞானத்தின் சகல சாத்தியங்களையும் நம் தினப்படி உபயோகத்திற்காக கொண்டு வரத்தொடங்கிவிட்டன.

  அதென்ன அணியக்கூடிய சாதனங்கள்?

  வாட்ச் கூட அணியக்கூடிய சாதனம் தான்!

  "ஒனக்கு ஒண்ணு தெரியுமா? கைக்கடிகாரம்னு ஒண்ணு வந்திருக்காம். அதை நம்ம மணிக்கட்டில கட்டிக்கினா, அப்போ நேரத்த சரியா சொல்லிடுமாம்!"

  எளிய வாட்ச் பற்றி அவை வந்த காலத்தில் நம் முன்னோர்கள் இப்படி பேசியிருக்ககூடும்!

  இப்போது நாமும் அதைப்போன்று இந்தக்கால தொழில்நுட்பத்தின் பொருட்களான அணியக்கூடிய சாதனங்களைப்பற்றித்தான் பேசப்போகிறோம்.

  "சாப்டாச்சா?"

  "ஆச்சும்மா!"

  "பால் குடிச்சியா?"

  "ம்!"

  "சரி, டிரீம் கட்டிண்டு தூங்கபோ! நாளைக்கு சண்டேதானே!"

  அதென்ன டிரீம்!

  நாம் தூங்கும்போது நம் உடல் பல புதுப்பித்தல்களைச் செய்து கொள்கிறது. மூளையில் ஆரம்பித்து குடல் வரை எல்லா பாகங்களும் தங்களை புதுப்பித்துக்கொண்டு அடுத்த நாள் மானேஜரின் குடச்சலுக்கு தயாராகிக்கொள்கிறது. இந்த புதுப்பித்தல்தான் தூக்கத்தின் மிக முக்கிய நன்மை. எனவே தூக்கம் சரியாக இல்லையென்றால், அடுத்த நாள் சிடுசிடுவென கோபம், மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு நீங்கள் காதலியின் கோபத்துக்கோ அல்லது முக்கியமான ஆர்டரையோ இழக்க நேரிடும்.

  இந்த டிரீம் (Dreem) என்னும் பொருள் ரிதம் (Rhythm) என்னும் கம்பெனி தயாரித்திருக்கும், தலையில் மாட்டிகொள்ள வேண்டிய ஒரு பட்டி. நாம் தூங்கும்போது ஒரு சில சத்தங்கள் ஏற்பட்டு தூங்குவதற்கான உந்துதலை மூளையில் ஏற்படுத்துகிறதாம். இந்த டிரீம் பட்டி இருக்கிறதே, அது தூக்கத்தில் மூளையின் செயல்பாட்டுடன் ஒத்திசைந்து அதே சப்தங்களை எற்படுத்தி தூக்கத்தை ஆழ்நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறதாம். அதோடு மூளையின் செயல்பாட்டை அளக்கும் கருவியான இ.இ.ஜி செய்வதுபோல இந்த டிரீம் பட்டியும் தூக்கத்தில் மூளையின் செயல்பாட்டை அளந்து ஒரு மொபைல் செயலி மூலம் நமக்குத் தெரிவித்துவிடுமாம்.

  "என்னங்க! மொபைல்ல பார்த்தேனே! நேத்து தூங்கும்போது மூளையில் ஒரே சந்தோஷக்குவியலாமே, என்ன அந்தச்சிறுக்கி நினைப்பா?"

  விஞ்ஞானத்தில் இந்த மாதிரி அபாயங்களும் இருக்கும் என்பதால் மொபைல் போனை மனைவி கண்ணில் படாமல் வைத்திருக்க வேண்டியிருக்கும்!

  இதே போல திங்க் (Thync) என்று தூக்கம் ஊட்டும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. இது தலையிலும் கழுத்திலும் உள்ள நரம்புகளில் மிக ஜெண்டிலாக மின்சாரத்துடிப்புகளை மூளைக்கு அனுப்பி அமைதியாக தூங்க வைத்துவிடுமாம்.

  அம்மா மெதுவாக கழுத்தைத்தடவிக்கொடுத்து, நெற்றியில் நீவி விட்டு ஆசையோடு சின்ன முத்தமிட்டு குழந்தையை தூங்கவைக்கும்போது ஏற்படும் மூளையின் செல்களிலான மாற்றங்களை சில மின்சாரத்துடிப்புகள் மூலம் ஏற்படுத்தி, இந்த திங்க் அதே அமைதியையும் சுகத்தையும் உண்டாக்கி தூங்கச்செய்துவிடுமாம்.

  ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உங்கள் கணவர் முன்னதாக எழுந்து ஷேவ் பண்ணி, குளித்து உங்களுடன் வரும்போது போட்டுக்கொள்ளும் அந்த கோவிந்தா மஞ்சள் சட்டையை விட்டுவிட்டு, வெளிர் நீல எலிட்ரோ கலர் சட்டையைத்தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டு, யார்ட்லிபர்ஃப்யூமைத் தெளித்துக்கொண்டு கிளம்பும்போது உங்களுக்கு ஏற்படுகிறதே ஒரு வித கோபம், அழுத்தம், படபடப்பு, அதைக்கூட வேறு விதமான எலக்ட்ரிக் துடிப்புகள் உண்டாக்கி அந்த ஸ்ட்ரெஸ் லெவலையும் கட்டுப்படுத்திவிடுமாம் இந்த திங்க்.

  ஆபீஸ் பார்ட்டிக்கு போகிறீர்கள். நீங்கள் வெகு நாளாய்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ரேணுகா, உங்கள் பிராஜக்ட் மானேஜர் அவினாசுடன் சிரித்து சிரித்து அவ்வப்போது அவன் மேல் பட்டுக்கொண்டு பேசுவதைப்பார்க்கும்போது ஒரு மாதிரி ஜிவ்வென்று உள்ளுக்குள் உடம்பு சூடாகி, நெற்றிப்பொட்டில் விண் விண் என்று தெறிக்கிறதா?

  விடுங்கள், பீல் (Feel) என்று ஒரு சமாச்சாரம் வந்திருக்கிறது. அது உங்களின் மூடைப்பற்றி துல்லியமாக நொடிக்குநொடி டான்ஸ் ஆடும் "பளிச்" துடிப்புகள் மூலம் சொல்லி, "அடக்கு அடக்கு" என்று உங்களுக்கு தெரிவித்துவிடும். ஏதேனும் பல் கடித்து அல்லது முறைத்து என்று உங்கள் ரேணுகா பாசத்தை வெளிக்காட்டினால் அடுத்த சம்பள ரிவ்யூவின் போது அவினாஷ் உங்களுக்கு கடைசி ரேட்டிங் கொடுத்து மூணரை பர்செண்ட்டுக்கு மேல் இன்கிரிமெண்ட் இல்லாமல் பண்ணிவிடுவானே! அதனால் பீல் சொல்லுவதைக்கேட்டு, நீங்களும் புன்னகைத்தவாறே "நைஸ் வெரி நைஸ்" என்று மையமாகசொல்லி ஒப்பேற்றலாம்.

  மேலே சொன்ன இந்த பீல் இருக்கிறதே அது பெரிய உஸ்தாது. இந்த மாதிரி உங்களின் மூடுகளை அவ்வப்போது காட்டிவிடுவதோடு இல்லாமல், அதை ஒரு டைரி மாதிரி குறித்துக்கொண்டும் விடுகிறது. பிற்பாடு ஒரு அமைதியான மாலையில் அதை நீங்கள் போட்டுப்பார்த்து அலசிக்கொள்ளலாம்.

  "அட! போன மாசம் எட்டாம் தேதி எனக்கு அப்படி ஒரு சோகமான மூடா இருந்திருக்கே !"

  யோசித்தால் மானேஜர் உங்களின் அடுத்த சீட் ஆசாமிக்கு பாராட்டுக்கடிதம் கொடுத்திருப்பார்.

  "முழுக்க முழுக்க அந்த புரோகிராமை டெஸ்ட் பண்ணி மன்றாடியது நானு! ஆனா பாராட்டு இவனுக்கா?"

  நீங்கள் குமைந்திருப்பது நினைவுக்கு வரும். ஆனால் அதே அடுத்த சீட் ஆசாமி ரெண்டு நாளைக்கு முன்னால் வேற ஏதோ ஒரு சொதப்பலினால் செமத்தியாக டோஸ் வாங்கியிருக்கக்கூடும். பீல் அதையும் காட்டி ஒரு நிமிஷம் உங்கள் மனசாட்சியை குமுற வைக்கும்.

  "அடக்கிராதகா! ஏண்டா இப்படி பொறாமையில கெடந்து உழண்டு கிடக்கே!"

  கையில் ஒரு மணிக்கட்டுப்பட்டியைக் கட்டிக்கொண்டு சிகரெட் பழக்கத்தையே நிறுத்த முடியும் என்கிறார்கள்.

  இதெல்லாம் நல்லதுக்குத்தானா இல்ல மனுஷனை வேறொரு ஸ்திதிக்கு கொண்டு சென்று விடுமா என்று சமூகவியலாளர்கள் கவலைப்படுகின்றனர்.

  நியோ லுட்டிஸம் (Neo Luddism), அனார்க்கொ பிரிமிடிவிஸம் (anarcho-primitivism) என்றெல்லாம் குழப்ப பெயர் வைத்துக்கொண்டு ஒரு கோஷ்டி உலாவிக்கொண்டிருக்கிறது.

  "த பாருங்கப்பா! இந்த டெக்னாலஜி அது இதெல்லாம் ஒண்ணும் உதவாது. மனிதனை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் இவற்றை ஒழித்துக்கட்டவேண்டும்!"

  இதைப்போலவே trans-humanism (டிரான்ஸ் ஹ்யூமனிஸம்). techno-progressivism (டெக்னோ புரொக்ரெஸ்ஸிவிஸம்) என்று சிக்கலான பெயர் வைத்த ஆசாமிகள் எதிர் கோஷம் போடுகின்றனர்.

  "விடுங்கப்பா அந்த பத்தாம் பசலி ஆசாமிங்களை! டெக்னாலஜினால எப்பேர்ப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கிறோம்! அதப்போய் ஒழிச்சுக்கட்டுன்னா, நல்லாவா இருக்கு!"

  உண்மை என்னவோ இவை இரண்டுக்கும் இடையிலேதான் இருக்கிறது!

  Next Story
  ×