search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  மும்மூர்த்திகளும் அருளும் ரத சப்தமி புகழ் செந்தலை சிவன் கோவில்
  X

  மும்மூர்த்திகளும் அருளும் ரத சப்தமி புகழ் செந்தலை சிவன் கோவில்

  • பிரம்மன் அமைத்த கோவிலில் குடமுழுக்கு செய்ய நாள் குறித்து யாக சாலைகள் அமைத்தான்.
  • கிழக்கில் 5 நிலை ராஜகோபுரத்துடன் பலிபீடம், கொடிமரம், நந்தி என ஆகம முறைப்படி சரியான இடத்தில் அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

  கடவுளை வணங்கிய ஒரு பெண்ணின் பெயரால் ஒரு ஊர் அமைந்து அவ்வூரில் நான்கு வேதங்களும் முழங்க அக்கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டன. இவ்வூர் சந்திரலேகைச் சதுர் வேத மங்கலம் ஆகும். இன்று செந்தலை எனப்படுகிறது.

  பிரம்மா கிருதயுகத்தில் ஆணவம் காரணமாக ஐந்து தலைகளில் ஒருதலையை இழந்தார். அந்தத்தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. பிரம்மனுக்கோ "சிவஇடர்தோஷம்" ஏற்பட்டது. பிரம்மா தனது ரத்தம் வழியும் சிவந்த தலையுடன் பெருமாளிடம் சென்று தன் தவறுக்கு பரிகாரம் கேட்டார். பெருமாள் ""சிவனது பணிக்கு இடர் உண்டாக்கியதால் சிவன் அலைய நேரிட்டது. ஆதலால் சகல நற்குணங்களும் கொண்ட ஒரு இடத்தில் காவிரி ஆற்றங்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்" எனப் பரிகாரம் கூறினார்.

  "சிஞ்சவனம்" என அழைக்கப்பட்ட வனத்தில் காவிரி ஆற்றங்கரையில் வாகை மரத்தின் அடியில், சிவகுடும்பத்திற்கு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். சிவனுக்கும் பார்வதிக்கும் அவரது மகன்கள் மற்றும் பரிவாரங்களுக்கும் தனித்தனியாக சன்னதி அமைக்கத் துவங்கினார்.

  பணி துவங்கும் முன் விக்னம் இல்லாமல் காரியம் முடிய ஆதி விநாயகர்க்கு ஒரு சன்னதி அமைத்தார். அவனது சகோதரன் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர்க்கு ஒரு சன்னதியும், எக்காலத்தும் மங்களமாகவும், ஸ்திரமாகவும் நிரந்தரமாகவும் மங்கலத்துடன் இருக்கும் தீர்க்க சுமங்கலிக்கு ஒரு சன்னதியும், சுயம்புவாய் தோன்றும் சிவலிங்கத்திற்கு ஒரு சன்னதியும் அமைத்து ஏவல் பணி செய்யும் சண்டிகேஸ்வருக்கென தனித்தனி சன்னதிகள் முறைப்படி அமைத்தார். பின்னர், ரத்தம் வழியும் தலையுடன் தன் பிழை பொறுத்தும், நன்னாளில் திருக்கோவிலில் எழுந்தருளி அருள் செய்ய வேண்டும் எனவும் வேண்டி சிவனுக்கு வலப்புறம் யோகத்தில் அமர்ந்தார். .

  பாண்டிய மன்னன் புறச்சமயம் மாறினான். மதுரை கோவிலை வழிபட இயலாத வகையில் பூட்டினான். சிறந்த சிவபக்த மனைவி இறைவனிடம் மன்னிப்பு கேட்டாள். இறைவன் "பிரம்மனால் அமைக்கப்பட்ட திருக்கோவிலில் எழுந்தருளும் நேரமாதலால் மக்களுக்கென அங்கு குடி பெயர்கிறேன். கவலை தவிர்க்க!" என கூறினான். பிரம்மன் அமைத்த கோவிலில் குடமுழுக்கு செய்ய நாள் குறித்து யாக சாலைகள் அமைத்தான்.

  குடமுருட்டி: சிவ பூஜைகள் துவங்கும் முன் காவிரி கழுவி சுத்தம் செய்ய வேகமாக வந்தாள். அப்போது யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த குடங்கள் அவளது வேகத்தால் உருண்டன. அதனால் காவிரி இங்கு""குடமுருட்டி"" என அழைக்கப்பட்டாள். மதுரையில் இருந்து இறைவன் மீனாட்சி அம்மையுடன் சுந்தரேஸ்வரர் என்ற பெயருடனே பிரம்மனால் அமைக்கப்பட ""பிரம்மாரண்ய க்ஷேத்திரத்தில்"" எழுந்தருளினார். ஈஸ்வரன் சிவ குடும்பத்துடன் எழுந்தருளும் காட்சியைக் காண தனது துணைவி மகாலட்சுமியுடன் பெருமாள் வந்தார்.

  மும்மூர்த்தித்தலம்: பிரம்மனால் சிவ குடும்பத்திற்காக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் திருமாலும் எழுந்தருளியதால் முதன்மையான "மும்மூர்த்தித்தலம்" என்னும் பெயரில் பிரம்மவனம் என வழங்கப்பட்டது. பிரம்மனும் தன் தோஷம் நீங்கினான்.

  மதுரையில் இருந்து வந்த சுந்தரனும் மீனாட்சியும் சிவகுடும்பத்துடன் எழுந்தருளிய தலத்தில் உலகம் உய்வு பெற வேண்டும் என்னும் நோக்கில் ஜம்புக மகரிஷி தொழுது அர்ச்சித்து பலன் பெற்றதால் திரேதாயுகத்தில் "ஜம்புகேசுவரம்" என அழைக்கப்பட்டது.

  கலியுகம்: கலியுகத்தில் வானில் சென்று கொண்டிருந்த கந்தர்வக் கன்னிகை ஒருத்தி அடர்ந்த செழிப்பும் வனப்பும் மிக்க வனத்தில் நுழைந்தாள். இளமைத் துடுக்கில் இருந்த அவள் பெயர் சந்திரலேகா என்பதாகும். அவளின் துடுக்குத் தனத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த முனிவரை கேலி பேச முனிவர் "மாநிட மங்கையாய் பிறக்க" என சாபமிட்டார். சாபம் பெற்ற சந்திரலேகா வருந்தி தனக்கு சாப விமோசனம் வேண்டினாள்"சுந்தரனாம் சோமன் மேனி தீண்டும் போது, முற்பிறவி நினைவுகள் தோன்றி விமோசனம் பெறுவாய்!" எனக்கூறினார்.

  சாபத்தால் தன் நினைவு மறந்த சந்திரலேகை பலரால் வணங்கப்பட்ட "செந்தலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்" இறைவனை எப்போதும் வணங்கி வந்தாள்.

  ரதசப்தமி: உலக நினைவில்லாமல் தினமும் சந்திர தீர்த்தம் என்னும் குடமுருட்டியில் நீராடுவதும் வாகை மரத்தடி சுந்தரேஸ்வரரை வணங்குவதும், சோமஸ்கந்த மூர்த்தியாய் சுமங்கலியுடன் அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தை வணங்குவதுமாக இருந்தாள். மார்கழி நோன்பிருந்து தைமாத வளர்பிறை சஷ்டியன்று இறைவனை வணங்க வந்தவளுக்கு சோமாஸ்கந்த மூர்த்தியின் பெயரில் அதிக ஈர்ப்பு உண்டாகியது. அந்த சுந்தர சோமனை தொட்டு வணங்கினாள். உடன் அவளது சாபம் விமோசனம் ஆனது. முன் நினைவுகள் திரண்டு வர உண்மை உணர்ந்தாள். தேவலோகம் செல்லும் முன் நான் உன்னைத் தொட்டு வணங்கியதால் இடர் நீங்கிய என் வரலாறு இங்கு கொண்டாடப்பட வேண்டும் என வேண்டினாள்.

  சூரியன் தன் கிரகணங்களுடன் ரதசப்தமி நாளில் ஒளிரத் துவங்கினான். சந்திர தீர்த்தத்தில் முழுகி, வாகை மரத்தடி சோம சுந்தரரை வணங்கி வானுலகம் சென்றாள். அதுமுதல் ரதசப்தமிகோவில் என போற்றப்படுகிறது.

  ரதசப்தமி அதிசயம்: ஒவ்வொரு ரதசப்தமி தினத்திற்கு முன் இரவில் அபிஷேக மண்டபத்தில் சோமாஸ்கந்தர் எழுந்தருளுவார். இரவு சந்திரன் நன்கு ஒளிரும் போது சோமஸ்கந்தருக்கு அபிஷேகம் நடைபெறும். ஓருசில நிமிடங்கள் மட்டும் சோமாஸ்கந்தரில் உள்ள "சோமன்" விக்கிரகத்தின் முகப்பு பகுதியில் ஒரு பகுதி மட்டும் கருமையாகி தேவ கன்னி சந்திரலேகா தொட்ட கையின் ரேகைகள் வரிகளாகத் தோன்றி மறையும் அற்புதம் நடைபெறும்.

  அபிஷேகம் முடிந்து அலங்காரங்களை தொடர்ந்து ரதசப்தமி அன்று சூரியன் உதய வேளையில் கோபுர வாயிலில் காட்சி தந்து, குடமுருட்டி தீர்த்தவாரிக்குச் சென்று பின் வீதி உலாவுடன் திருக்கோவிலுக்கு வருவது சந்திரலேகாவிற்குத் தரப்படும் நினைவு நிகழ்வாகக் கொள்ளப்படுகிறது.

  பிற அபிஷேகங்கள்: இதே போல் சோமஸ்கந்த மூர்த்திக்கு ஐப்பசி அன்னாபிஷேகம், தை சங்கராந்தி ஆகிய இரவுகளில் நடைபெறும் பூஜையில் சந்திரலேகையின் கைவிரலில் ரேகைகள் தோன்றும் அற்புதக்காட்சி கண்டு தரிசிக்கத்தக்கவை.

  பெயர்க்காரணம்: குருதி வழியும் தலையோடு அமர்ந்து ஓமம் முதலியவற்றை பிரம்மா செய்ததால் ""சிவந்த தலை"" செந்தலை என வழங்கப்பட்டது.

  லேகை என்றால் கோடு, குறி என்பது பொருள் ஆகும். சந்திரனின் கோடு அல்லது குறி இறைவன் மீது படும்போது சந்திரலேகாவின் ரேகைகள் தெரிவதால் "சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலம்" என ஊரின் பெயர் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.

  கல்வெட்டுகள் இவ்வூர் இறைவனை"திருப்பெருந்துறை மகா தேவர்" என்றே குறிக்கின்றன. மாணிக்க வாசகருக்காக நரிகள் பரிகளாயின. இங்கு துவாபரயுகத்தில் குதிரைகள் இறைவனை வணங்கியதால் அதே பெயர் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது.

  தீர்க்க சுமங்கலி தலம்: பதினாறு பேறுகளில் ஒன்றான குழந்தைப் பேறும் பெற்று சந்ததியர்களுடன் சந்தோஷமாய் வாழும் பெண்ணை தீர்க்க சுமங்கலி என்பர்.

  யோகாம்பிகையாம் மீனாட்சி தன் கணவன் மக்கள், மருமகள்கள், விஷ்ணு, மகாலட்சுமி, சப்தமாதர்கள், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, குரு, பிரம்மா ஆகியோர் உடனிருக்கவற்றாத வளத்தையும் செல்வத்தையும் வேண்டியவர்க்கு வாரி வழங்கிக் கொண்டு இருப்பதால் இதனை தீர்க்க சுமங்கலி (மீனாட்சி) தலம் என அழைக்கப்படுகிறது.

  வழிபாட்டு வகைகள்: அமாவாசையில் வழிபட்டு பிதுர்தோஷம் நீங்குகின்றனர். வாரத்தில் திங்கட் கிழமையில் சுந்தரேஸ்வரரையும் செவ்வாய், வெள்ளியில் சுமங்கலி மீனாட்சியையும், வியாழக் கிழமையில் குரு-பிரும்மாவையும் வணங்கி பலன் பெறுகின்றனர்.

  வரலாற்று ஆவணம்: பிரரம்ம கைவத்தம் என்னும் நூலில் மட்டும் இல்லாமல் இத்திருக்கோவிலின் சிற்பங்களிலும் ஒவ்வொரு யுகத்திலும் யார் வழிபட்டு உள்ளனர் என்பது காட்டப்பட்டு உள்ளது.

  கிழக்கில் 5 நிலை ராஜகோபுரத்துடன் பலிபீடம், கொடிமரம், நந்தி என ஆகம முறைப்படி சரியான இடத்தில் அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

  செந்தலை என்னும் இவ்வூரை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 20 கி.மீ பயணப்பட்டு கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் பேருந்துகள் மூலம் சென்று அடையாளம் தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 150 அடிகள் நடந்து திருக்கோவிலை அடையலாம்.

  திருக்கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 4.30 முதல் 7.30 மணி வரையும் பொது மக்கள் தரிசிக்கலாம்.

  இவ்வாண்டு செந்தலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் "ரத சப்தமி உற்சவம்" ஜனவரி 27-ந்தேதி பூர்வாங்க பூஜை நடந்து "சந்திரரேகை" என்று சொல்லக்கூடிய ரேகை மச்சம் தரிசிக்கும் நிகழ்வு இரவு 11 மணிக்கு மேல் அபிஷேகத்தின்போது நடைபெறும். மறுநாள் 28-ந்தேதி ரதசப்தமியின் தொடர்ச்சியாக குடமுருட்டியில் சந்திரலேகைக்கு சாப விமோசனம் அருளும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தலையில் ஏழு எருக்கஇலை மங்கள அக்ஷதை மஞ்சள் இவைகளை தலையில் வைத்துக் கொண்டு குடமுருட்டி -காவேரி ஆற்றில் மூழ்கி இறைவனுடைய அருள் பெறுவர்.

  Next Story
  ×