search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சினிமா-அரசியலில் உங்கள் ரோஜா: அரசியல் ஒரு புதிர் விளையாட்டு
    X

    சினிமா-அரசியலில் உங்கள் ரோஜா: அரசியல் ஒரு புதிர் விளையாட்டு

    • திரைபிரபலங்களின் வருகையால் அரசியலிலும் ரசிகர்களிடமும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
    • சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி எனக்குச் சுத்தமா டான்ஸ் தெரியாது.

    2014 சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு தேர்தல் களத்தை நாங்கள் சந்தித்தோம். எப்படி திரைப்படங்களில் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைக்கும் பாத்திரமாக நிற்கச் செய்ய வேண்டும் என்று கடினமாக உழைப்போமோ, அதேபோல் அரசியலிலும் ஏற்று இருக்கும் பதவியையும் எதிர்பார்க்கும் வெற்றியையும் மனதில் கொண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், அவர்கள் ஆதரவை அள்ளியாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் வியூகம் அமைத்து களம் இறங்கினோம்.

    ஆந்திர அரசியலில் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

    அந்தத் தேர்தல் களம் திரை நட்சத்திரங்களும் களம் இறங்கி கலக்கிய களமாக அமைந்தது. நகரி தொகுதியில் களம் இறங்கிய எனக்கு தொண்டர்கள் தந்த உற்சாக வரவேற்பு மனதில் மிகப்பெரிய தைரியத்தை கொடுத்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தொண்டர்கள் கூட்டம் திரண்டு இருந்தது, அவர்களுடைய ஆரவாரத்தையும், ஆதரவையும் பார்த்த போது எனது வெற்றி நிச்சயம் என்று உறுதி செய்யப்பட்டது.

    நகரில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்று முடிவு செய்து வீடு வீடாக வாக்கு கேட்டு சென்றோம். வெயிலோ, மழையோ, குளிரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரசாரத்தில் தீவிரம் காட்டினோம். தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்தோடு பிரச்சார களத்தில் என்னோடு துணை நின்றார்கள். தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளுவதற்கு உதவினார்கள்.

    அந்தத் தேர்தலில் நகரி மட்டுமல்லாது மேலும் சில தொகுதிகளில் திரை நட்சத்திரங்கள் தேர்தலை சந்தித்ததால் கட்சிக்காக திரண்ட கூட்டம் மட்டுமின்றி திரை பிரபலங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் திரண்டவர்களும் ஏராளம்.

    மேடத் தொகுதியில் விஜயசாந்தி, செகந்தி ராபாத் தொகுதியில் ஜெயசுதா என்று திரை பிரபலங்கள் தேர்தல் களத்தில் நின்றார்கள். ஒவ்வொருவரும் வேறு கட்சிகளில் நின்றாலும், திரைபிரபலங்களின் வருகையால் அரசியலிலும் ரசிகர்களிடமும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

    அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். எங்கள் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது. என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சந்திரபாபு நாயுடு என்னை முடக்குவதற்கான அத்தனை வழிகளையும் மேற்கொண்டார். அவ்வாறு அவர் குறுக்கு வழியில் மேற்கொண்ட முயற்சி தான் ஒரு வருட காலம் என்னை சட்டமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடை போட்டது. அவரது அந்த நடவடிக்கையால் நான் துவண்டு போகவில்லை. சட்டரீதியாக அதை எதிர்கொள்ள தயாரானேன்.

    இதற்கிடையில் ஏற்கனவே என்னை கொல்ல சதி நடந்த அதே கோவில் திருவிழா மீண்டும் வந்தது. அந்த திருவிழாவுக்கு செல்வதற்கு எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. ஆனால் மிரட்டல்களுக்கு பயப்படும் நிலையில் நான் இல்லை. சூழ்நிலையை கருதி கோவிலுக்கு வரவேண்டாம் என்று போலீசாரும் ஆலோசனை வழங்கினார்கள். பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் போலீசாரின் கடமை. ஒரு மக்கள் பிரதிநிதியான எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆவேசப்பட்டேன். நான் வருவதை யாரும் தடுக்க முடியாது. இந்த மாதிரி மிரட்டல்களுக்கு அஞ்சினால் நான் அரசியலுக்கே வந்திருக்க முடியாது. எனவே திட்டமிட்டபடி கோவிலுக்கு வருவேன், வழிபாடு செய்வேன். யாரை பற்றியும் நான் கண்டுகொள்ள போவதில்லை என்று அறிவித்துவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட்டு திரும்பினேன். இதை நான் சொல்வதற்கு காரணம் அரசியல் என்றாலே இந்த மாதிரி மிரட்டல்கள் வரத்தான் செய்யும். அதை கண்டு பயந்தால் பெண்கள் அரசியலுக்கு வர முடியாது.

    சட்டரீதியாக எனக்கு விதிக்கப்பட்ட சட்டமன்ற தடையை உடைப்பதற்கு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அந்த வழக்கும் தள்ளுபடி ஆனது. அதன் பிறகும் நான் சும்மா இருக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தேன்.

    ஆரம்பகாலத்தில் உரக்கப் பேசாத நான் அரசியல்வாதியாக மைக் பிடித்தாலே ஸ்பீக்கர் அதிரும் வகையில் பேசுவது எதிர்பார்க்காத ஆச்சர்யம். "சினிமாவுல வேலை செஞ்சப்போ நான் ரொம்பவே ஜாலியா, சாப்ட்டாதான் பேசுவேன். அரசியல் களம், நம்மோட இன்னொரு முகத்தை வெளிப்படுத்த வைக்கும். எதிர்க்கட்சிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க, அதிரடியா பேச வேண்டியதா இருந்தது. 'நாங்க பார்த்த ரோஜாவா இது...?'என்று ரம்யா கிருஷ்ணன் உள்பட என் சினிமா பிரெண்ட்ஸ் பலரும் தமாஷா சொல்லுவாங்க. 'நீயா ரோஜா இப்படியெல்லாம் பேசுறே?'என்று. அதைகேட்டு நானே ஆச்சர்யப்படுவேன்.

    அரசியலில் நிலைக்க வேண்டும் என்றால்துணிச்சலும் தைரியமும் தான் முக்கியம் என்பதை நான் அரசியலுக்குள் நுழைந்ததுமே உணர்ந்து கொண்டேன். அதனால் தான் அரசியலில் எதைப் பற்றியும் யோசிக்காமல் துணிச்சலாக செயல்பட தொடங்கினேன்.

    தெலுங்கு தேசம் கட்சியில் நான் இருந்தபோது அதாவது 1999-களில் அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தோடு இருந்தேன். அப்போது ஆந்திராவில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்தப் பகுதிகளில் மாத கணக்கில் சுற்றுப்பயணம் செய்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டேன். உயிருக்கே ஆபத்தான பகுதி என்று ஒவ்வொருவரும் எச்சரித்தனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் என் வழியில் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஆந்திராவில் இது பேசு பொருளாகவே மாறியது.

    சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த வங்க, ஒருமுறை தோல்வியைச் சந்திச்சாலே, 'இது நமக்குச் சரிப்பட்டு வராது'னு இந்த பீல்டிலிருந்தே விலகிடுவாங்க. அந்த மாதிரி நானும் முடி வெடுப்பேன்னு நினைச்சு தான், சந்திரபாயு நாயுடுவின் கட்சியில நான் இருந்தப்போ, என்னைத் திட்டமிட்டு தோற்கடிக்க வெச்சாங்க. சுதந்திரமா வேலை செய்ய விடாம, சந்திரபாபு நாயுடு கட்சிக்காரங்க ரொம்பவே என்னைச் சீண்டினாங்க.

    சினிமாவுல சக்சஸ் மட்டுமே அதிகமா பார்த்திருந்தேன். ஆனா, அரசியல்ல அதுக்கு நேரெதிரா நீண்ட காலத்துக்கு தோல்வியை மட்டுமே பார்த்தேன். 'சினிமா நடிகையால வெயில்ல நின்னு பிரசாரம் செய்ய முடியாது. மெனக்கெட்டு வேலை செய்ய முடியாது'னு ஒவ்வொருவரும் சொன்னதை, நினைத்ததை பொய்யாக்கி காட்டினேன்.

    மனதளவில் என்னை முடக்கணும், என்று என் கேரக்டரையும், நடத்தையையும் தப்பா பேசி காயப்படுத்தினாங்க. நான் பெண்ணா இருக்கிற தாலேயே அரசியல்ல என்னை வளரவிடக் கூடாது என்று எனக்கு எதிரா நிறைய சூழ்ச்சிகள் செஞ்சாங்க. எந்த விஷயத்துல என்னைச் சீண்டினாலும், அதுல வெற்றியடைஞ்சே ஆகணும் என்று எனக்குள்ள வெறி வரும்.

    சினிமாவுக்கு நான் வந்த புதியதில், 'உனக்கு டான்ஸ் தெரியலை; உன் வாய்ஸ் சரியில்லை' என்று நிறைய புறக்கணிப்புகளைப் பார்த்தேன். அதையெல்லாம் சமாளிச்சு தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியா நடிச்சேன்.

    சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி எனக்குச் சுத்தமா டான்ஸ் தெரியாது. ஆனா, 'என்கூட நடிச்ச ஹீரோயின்ஸ்லயே பெஸ்ட் டான்ஸர் நீங்கதான்' என்று பிரபு தேவாவே பாராட்டுற அளவுக்கு என் திறமையை வளர்த்துக்கிட்டேன்.

    அந்த மாதிரி, ஜெகன் அண்ணாவோட கட்சியில சேர்ந்து அரசியல்ல ரீ-என்ட்ரியை ஆரம்பிக்கிறப்பவே, இனி என்ன நடந்தாலும் அரசியல்லயும் வெற்றியைப் பார்க்காம பின்வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

    அது தான் என்னை அரசியலில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

    சட்டமன்றத்துல என்னைப் பார்க்கும்போதெல்லாம், 'ஒரு நல்ல ஆள விட்டுட்டோமே'னு சந்திரபாபு நாயுடு நினைக்கிற மாதிரி வேலை செய்யணும்னு முடிவெடுத்தேன். அதையும் சாத்தியமாக்கினேன்.

    அரசியலைப் பொருத்தவரை அது ஒரு புதிர் விளையாட்டு போன்றது நாம் சாதுரியமாக விளையாடினால் சாதிக்கலாம்.

    (தொடரும்) ttk200@gmail.com

    Next Story
    ×