search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  காலம் அறிந்து செயல்படுங்கள்!
  X

  காலம் அறிந்து செயல்படுங்கள்!

  • 7 கிரகங்களுக்கு மட்டும்தான் ஓரை உண்டு.
  • மகாபாரதத்தில் இதற்கான விளக்கத்தினை பார்த்தால் புரியும்.

  ஓரையைப் பார்த்து வேலையினை செய்தால் முழு வெற்றி" என சித்தர்கள் முன்பே கூறி வைத்துள்ளார்கள் என்றார் அந்த பெரியவர். ஓரைப் பார்த்து ஒரு செயலை செய்து பல பிரச்சனைகளை தவிர்த்துள்ளனர் நம் முன்னோர். ஆம், சித்தர்களே ஓரை பார்க்கச் சொல்லும் போது நாம் கடை பிடிக்காமல் இருப்போமா என்ன?

  7 கிரகங்களுக்கு மட்டும்தான் ஓரை உண்டு. ராகு, கேதுவிற்கு ஓரை கிடையாது. சாயா கிரகங்கள் என்பதால் ஓரை கிடையாது.

  சூரியன் அருகில் இருக்கும் கிரகங்கள், அதன் ஈர்ப்பு சக்தி, அதன் ஒளி கதிர்கள், பூமியை அடையும் காலம் இவற்றினை வைத்துதான் ஓரைகள் உருவாக்கப்படுகின்றன. ஞாயிறன்று முதல் ஓரை சூரியனுக்குரியது ஆகும். இந்த ஓரை கால அட்டவணையை பஞ்சாங்கம், காலண்டர் என இப்போது ஜாதகங்களில் கூட அச்சடித்து எளிதாகக் கொடுக்கின்றனர்.

  இந்த ஓரை என்பது சுப காரியம் செய்வதற்கு ஆரம்பிப்பதற்கு பார்க்கப்படும் காலங்களாகும். இந்த ஓரை சூரிய உதயத்தினை வைத்துதான் கணக்கிடப்படுகின்றது.

  சூரிய ஓரை என்றால் மேல் அதிகாரிகளை சந்தித்தல், கோர்ட்டு வழக்கு விவரங்களை கவனித்தல், அரசு சம்பந்தப்பட்ட பணிகள் போன்றவற்றை எடுத்துச் செய்யும் போது சாதகமாக அமையும் என்கின்றனர். ஆனால் இந்த ஓரையில் ஒப்பந்தங்கள் மற்றும் சுப காரியங்களை செய்வது இல்லை.

  சுக்கிர ஓரை: சகல சுப காரியங்களுக்கும் உகந்த ஓரை என்பர். நகை, பொருள், வீடு, ஆடை வாங்கலாம்.

  புதன் ஓரை: எழுத்து, கல்வி தொடர்பான செயல்களைச் செய்யலாம்.

  சந்திர ஓரை: பொதுவில் வளர்பிறை சந்திரனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பெண் பார்த்தல், கல்யாணம், காது குத்தல், சீமந்தம் அனைத்தும் செய்வர்.

  சனி ஓரை: இந்த ஓரையில் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிப்பர்.


  குரு ஓரை: அனைத்தும் சுபமே. ஆனால் நியாயமற்ற எந்த வேலையை இந்த ஓரையில் செய்தாலும் செய்பவர் திண்டாடி, சீர் குலைவார். பொதுவில் எந்த நியாயமற்ற செயலையும் எந்த ஓரையிலும் செய்யாது இருப்பது நல்லது.

  செவ்வாய் ஓரை: சொத்து பிரிப்பது, சொத்து விற்பது, வாங்குவது போன்ற செயல்கள் வெற்றி தரும். பொதுவில் அதிகாரம், சண்டை, வம்பு இவற்றினை இந்த ஓரையில் தவிர்த்து விட வேண்டும்.

  வெள்ளிக்கிழமை-குரு ஓரையில் செயல்களை தவிர்க்க வேண்டும்.

  செவ்வாய்-சனி ஓரையில் வாக்குவாதமே வேண்டாம்.

  வாழ்க்கை என்பது சில ரகசியங்களை உட்கொண்டது. அதில் இதுவும் ஒன்று என்பதால் உங்களுடன் நானும் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.

  ஏன் இந்த ஓரையினைப் பற்றி இங்கு குறிப்பிட்டு உள்ளோம். வாழ்வில் நேரம், காலம் என்பதுதான் மிக முக்கியமாக உள்ளது. கொஞ்ச நேரம் பிரண்டோடு அரட்டை அடிக்கலாம் என்றால் அந்த நேரம், காலத்தினை நாம் இழந்து விடுகின்றோம். சில நொடிகள் கூட வாழ்க்கைக்கு மிக முக்கியமானதுதான். அப்படியிருக்க பல மணி நேரங்களை நாம் வீணடிக்கின்றோம். கேட்டால் நேரம் சரியில்லை என்கின்றோம். முயன்றால் முடியாதது இல்லை-இது தன்னம்பிக்கை. கூடவே நம்பிக்கை இருப்பவர்கள் ஓரை பார்த்து செய்யலாமே. முயன்று பார்க்கலாமே. இது நமக்கு சித்தர்கள் காட்டிய வழிதானே.

  எல்லாம் மாயைதான். எல்லாம் மாறும். எதுவும் நிலையானது இல்லை என்று சொல்லப்படுகின்றது. இது முற்றிலும் உண்மையே. ஆனால் இந்த பொறாமை மட்டும் வளர்ந்து கொண்டே போகின்றது. அடுத்த தலைமுறையினரையும் தொற்றிக் கொள்கின்றது. இதனின் முடிவு மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

  ஒருவர் சற்று சிரித்தால் கூட அடுத்தவரால் அதனை பொறுத்துக் கொள்ள முடிவில்லை. ஒரு வீட்டில் அமைதி இருந்தால் மற்றவர் அதனை தானே முனைந்து வந்து கெடுப்பார்.

  மகாபாரதத்தில் இதற்கான விளக்கத்தினை பார்த்தால் புரியும். திருதிராஷ்டிரனின் மனைவி காந்தாரை கர்ப்பமாக இருந்தாள். அந்நேரம் காட்டில் பாண்டுவின் மனைவி குந்தி பிள்ளைகளை பெற்றாள். தனக்கு முன்பே குந்தி பிள்ளைகளைப் பெற்றது காந்தாரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் பொறாமையால் தகித்தது. காந்தாரி ஒரு உலக்கையை எடுத்து வயிற்றில் இடிக்க அவை 101 பிண்டங்களாக வெளியே வந்தன. அவற்றினை வியாசபிரான் 101 கலசங்களில் இட்டு பாதுகாக்க 100 கவுரவர்களும், ஒரு சகோதரியும் பிறந்தனர். பொறாமையின் உச்சத்தில் பிறந்த காரணத்தினால் பிறந்ததில் இருந்தே தீய எண்ணங்கள், தீய செயல்கள் இப்படியே வளர்ந்தனர். இதன் காரணமாகவே மகாபாரத போர் மூண்டது. அதன் அழிவு என்ன என்பதை அனைவரும் அறிவர். ஆக ஒருவரின் பொறாமை எந்த அளவு நாட்டினையே அழித்தது என்பதனைப் பாருங்கள். ஆக எந்த காரணம் கொண்டும் பொறாமை கொள்ளக் கூடாது. அது பொறாமை கொள்பவரையும், மற்றவர்களையும் அழித்து பாவ மூட்டைகளை குவித்து விடும்.

  கமலி ஸ்ரீபால்

  பொறாமை கிட்டே வந்து விடாமல் இருக்க அனைத்தும் மாயையே என்று மனதில் பதிய வைத்துக் கொண்டால் போதும்.

  பசி இல்லாத போது எந்த உணவும் ருசியாகத் தெரியாது. அது போலத்தான் ஆன்மீக பசி இல்லாமல் மிகப்பெரிய செய்திகள் மனதில் பதியாது.

  'பிறருக்கு நன்மையே நினைத்தால் நமக்கும் நன்மையே வந்து சேரும். இது பிரபஞ்ச விதி. இயற்கையின் சட்டம்'

  பொறாமை தீ என்பதனை ஆன்மிகத் தேடல் மூலம் கட்டுப்படுத்த முடியும். பொதுவில் மருத்துவ ரீதியான தியான பயிற்றுவிப்பில், கோபம், பொறாமை 'பாதிப்பில்' அதிகம் உள்ளவர்களை ஒரு செயலினைச் செய்யச் சொல்வார்கள். அவர்கள் மனதிற்கு பிடிக்காதவர்களை நினைத்து 'வாழ்க வளமுடன்' என்று முழு கவனத்துடன் வாழ்த்தச் சொல்லுவார்கள். பல முறை அதாவது குறைந்தது பத்து நிமிடம் இவ்வாறு சொல்ல வேண்டும். கண்களை மூடி கைகளால் ஆசிர்வதித்து வாய்விட்டு சொல்ல வேண்டும். முதலில் ஆரம்பிக்கும் கால கட்டத்தில் அவர்கள் சொல்லும் 'வாழ்க வளமுடன்' என்ற சொல்லிலேயே எதிராளி மண்டை நொறுங்கி விழுந்து விடுவது போல் ஒலிக்கும். அத்தனை குரோதம் மனதிலும், உடலில் ஒவ்வொரு செல்களிலும் பரவி உள்ளது. ஒரு சில வாரங்களில் மெதுவாக இது கட்டுப்பட்டு மனம் அமைதி ஆகி விடும். இவர்களும் ஆன்மிகத் தேடலோ (அ) தன்னை நம்பி முன்னேறுதல் என ஏதாவது ஒரு வகையில் முன்னேறுவார்கள். உடல் நலமும் கூடும். பிறருக்கு நன்மை நினைப்பர். தீமை, கோபம், இவை இல்லாது இருப்பர். இத்தகைய நிம்மதி எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது. செய்வோமே!

  இந்த நிம்மதிக்கு மேலும் சில விதிமுறைகளை கடைபிடிக்கலாம். யாரும் நம்மை பார்க்க வேண்டும். கவனிக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய தீரா தலைவலியாகும்.

  தேவைக்கு அதிகமாக பேசாதீர்கள்.

  வம்பு செய்வது, ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி பேசுவது போன்றவை நம் வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம். எப்பவும் நேர்த்தியாய் ஆடை உடுத்தி, கம்பீரமாய் இருங்கள். ஆடம்பரம் இல்லாமல் எளிமையிலும் இவ்வாறு இருக்க முடியும். உங்களின் நேரம் உங்களுக்கு முக்கியமானது.

  சிறிதளவாவது தானம் தர்மம் செய்யுங்கள் 'மதியாதார் தலை வாசல் மிதியாதே' இதனை நினைவில் கொள்ளுங்கள். பாதி நிம்மதி இழப்பது இதனால்தான். இவற்றினையும் பழக்கத்தில் கொண்டு வருவோமே.

  * பொதுவில் எதிலும், எவரிடத்திலும் சற்று தள்ளி இருப்பதே தெளிவாக இருக்கச் செய்யும்.

  * அமைதி நமக்கு தேவைப்படும் போது பல உறவுகள் நம்மை விட்டு தள்ளிதான் இருக்கும்.

  * பொய்யான வாக்குறுதிகளைக் கூறுவதனை விட நேராக எதனையும் முடியாது என்று கூறி விட வேண்டும்.

  Next Story
  ×