search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  தொழிலில் புதுமை செய்த கோத்ரெஜ்
  X

  தொழிலில் புதுமை செய்த கோத்ரெஜ்

  • மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ்.
  • சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் பாய்ஸ்.

  என்ன வீட்டை பத்திரமா பூட்டியாச்சா?

  வீட்டை விட்டு வெளியூர் செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறுதி செய்து கொள்வது "வீட்டை நல்லா பூட்டியாச்சா?", கோத்ரெஜ் பூட்டு தானே? என்பது தான்!

  பாடுபட்டு உழைத்து நகைகளை வாங்கி திருமணம் நடத்தத் தயாராக இருக்கும் குடும்பத்தினர், "நகையெல்லாம் பத்திரமா ?", கோத்ரெஜ் லாக்கரில் தானே வச்சிருக்கே?" என்று கேட்கும் போது, பெருமையுடன் பதில் இப்படி வரும்: "கவலையே பட வேண்டாம். கோத்ரெஜ் லாக்கர் தான், சுவரோடு பதிக்கப்பட்டது, யாரும் தூக்கிக் கொண்டு போக மூடியாது. டிஜிடல் லாக் கொண்டது" என்று பதில் வரும்.

  ஆம். நமது சொத்துக்களையும் பத்திரங்களையும் விலை உயர்ந்ததாக நாம் கருதுவதையும் பத்திரமாகப் பாதுகாப்பது கோத்ரெஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

  இதை நிறுவியவர் வணிக நிறுவனத்தில் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்ட சிறந்த தேசபக்தி கொண்ட தேசபக்தரான அர்தேஷிர் கோத்ரெஜ் ஆவார்.

  பிறப்பும் இளமையும்: பாரம்பரியம் மிக்க பார்சி குடும்பத்தில் 1868-ம் ஆண்டு புரி

  யோர்ஜிக்கும் தோஷிபாய் கூத்தராஜிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார் அர்தேஷிர் கோத்ரெஜ். அவரது தந்தையார் வீடு, நில உடமைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1871-ல் அவர் குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றிக் கொண்டார்.

  திருமணமும் பேரிழப்பும்: 1890-ல் பதினெட்டே வயதான ஆர்தேஷிருக்கும் பச்சுபாய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய சோக நிகழ்வு அவர் வாழ்வில் நடைபெற்றது.

  1891, ஏப்ரல் மாதம் 25-ம் நாள் பச்சுபாயும் அவரது நெருங்கிய உறவினரான பிரோஜ்பாய் ஷொராப்ஜி கம்டினும் ராஜாபாயும் கோபுரத்தில் ஏறிப் பார்ப்பது என்று தீர்மானித்தனர். அந்த கோபுரம் 279 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம். அதில் இருவரும் ஏறி உச்சிக்குச் சென்ற போது இரண்டு பொல்லாத போக்கிரிகளான அழகிகள் அவர்களை அணுகி தவறாக நடக்க முயற்சித்தனர். உடனே இருவரும் அந்த கோபுரத்தில் இருந்து கீழே குதித்தனர். மரணமடைந்தனர். இது பெரிய அதிர்ச்சியையும் இழப்பையும் அர்தேஷிர் கோத்ரெஜுக்குத் தந்தது. தன் வாழ்நாள் முழுவதும் அவர் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை.


  வக்கீல் படிப்பு: 1894-ல் வக்கீல் படிப்பை முடித்த அவருக்கு நல்ல கேஸ்கள் வந்தன. ஜான்ஜிபாரில் ஒருவருக்கு வக்காலத்து வாங்க ஒத்துக்கொண்ட கோத்ரெஜ் அந்த கேசில் உண்மைக்கு அல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளத் தீர்மானித்த அவர் கேசிலிருந்து விலகினார். "கேசில் எனது பக்கத்தை மட்டும் நான் பார்க்கவில்லை, இரண்டு பக்க உண்மைகளையும் பார்த்தேன், விலகினேன்" என்று பின்னால் அவர் கூறினார்.

  மருந்து தயாரிப்புகள்: அடுத்து என்ன செய்வது? மெர்வான்ஜி முன்செஞ்சர்ஜி என்பவர் ஒரு சிறந்த வணிகர். அவரிடம் சென்று கோத்ரெஜ் தொழில் தொடங்க 3000ரூபாய் கடனாகக் கேட்டார். இதனால் வியந்து போன அவர் எதற்காக என்று கேட்டார். சர்ஜிகல் கருவிகள் செய்வதற்காக என்று பதில் வந்தது. "இதை உங்கள் தந்தையாரே சந்தோஷமாகத் தருவாரே, என்னிடம் எதற்கு வர வேண்டும்" என்று வியப்புடன் அவர் கேட்டார்.

  "என் தந்தையாரிடம் நான் கேட்டால் அவர் அதை இனாமாகத் தந்து விடுவார். எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படியான கடன் தான் வேண்டும்" என்றார் கோத்ரெஜ்..

  மனம் மகிழ்ந்த மெர்வான்ஜி 3000 ரூபாயைக் கொடுத்தார். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ். தயாரிப்புகள் தரத்துடன் பிரமாதமாக அமைந்தன. அவர் தான் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடம் அவற்றைக் காட்டவே அவர் பிரமித்தார். ஆனால் அவர், "இதை 'மேட் இன் இண்டியா' என்று போடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

  இதை உடனே மறுத்த தேசபக்தரான கோத்ரெஜ் இந்தத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் ஆழ்ந்தார்.

  போலீஸ் கமிஷனரின் அறிவிப்பு: அப்போது பம்பாய் போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஏராளமான வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போகின்றன. நல்ல பாதுகாப்பை அளிக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் அறிவிப்பு.

  சிந்தனையில் ஆழ்ந்தார் கோத்ரெஜ்: நேராக மெர்வான்ஜியிடம் சென்றார். தனக்கு நல்ல பாதுகாப்பான பூட்டைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாகக் கூறினார்.

  ச.நாகராஜன்

  'இதற்கு முன்னர் யாருமே பூட்டு செய்யவில்லையா என்ன?' என்று கேட்டார் மெர்வான்ஜி.

  அதற்கு பதிலாக, "நான் சிறந்த நல்ல பூட்டைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார் அவர்.

  உடனே தேவையான பண உதவியைச் செய்தார் மெர்வான்ஜி.

  215 சதுர அடியே கொண்ட ஒரு சிறிய ஷெட்டில் தன் தொழிற்சாலையை ஆரம்பித்தார் கோத்ரெஜ்.

  மிகுந்த உழைப்பின் பேரில் தினசரி ஆராய்ச்சி செய்து யாரும் திறக்க முடியாத நான்கு லீவர் கொண்ட பூட்டு ஒன்றை அவர் தயாரித்தார்.

  சந்தையில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. உடனே அடுத்தபடியாக இரண்டு சாவிகள் கொண்ட ஒரு பூட்டைத் தயாரித்த அவர் இரண்டாவது சாவி தேவையான மாற்றங்களை பூட்டின் உள்ளே செய்யக் கூடிய வகையில் புதுமையாக வடிவமைப்பைச் செய்தார்.

  இதைத் தொடர்ந்து யாருமே எளிதில் திறக்க முடியாத பாதுகாப்பைக் கொண்ட பல வடிவமைப்புகளைக் கொண்ட பூட்டுகளை அவர் தயாரிக்க ஆரம்பித்தார்,

  ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சிறப்பான பெயர் சூட்டப்பட்டது. ஒன்றின் பெயர் கார்டியன் லாக். இன்னொன்றின் பெயர் டிடெக்டர் லாக்.

  நிறுவனம் படிப்படியாக உயர்ந்தது. பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

  சேப் தயாரிப்பு: 1901-ல் கோத்ரெஜ் பாதுகாப்பான 'சேப்' (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.

  அப்போது சான்பிரான்சிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேப்களும் அழிந்து போயின.

  இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேபை வடிவமைத்தார்.

  இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.

  தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-ல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.

  கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்: ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபகத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டார்.

  'எது வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.

  எனது உறவினாரான பாய்சிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.

  நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.

  அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ். அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.

  ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.

  சோப் தயாரிப்பு: 1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.

  ஆனால் இயல்பான அவரது "எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்" அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.

  இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நவுரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.

  ஆனால் சுதேசித் தயாரிப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

  சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ் நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

  எலிசபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.

  ஆதி கோத்ரெஜ்: இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் ஆதி கோத்ரெஜ். அவருக்கு வயது 82 . இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.

  சமீபத்தில் விண்ணில் பறந்த சாட்டிலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்.

  வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

  இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் - சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட், நூபுர் ஹென்னா, ஹேர் கேர், கோத்ரஜ் பர்னிச்சர், கோத்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,- மிக மிக நீண்ட கோத்ரெஜ் என்று தொழில்துறையின் பட்டியல் தொடரும்.

  கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?

  மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.

  ENTERPRISE AND ETHICS

  - THE TWO PILLARS OF THE EMPIRE!

  வணிகம் - நன்னெறி இவை

  சாம்ராஜ்யத்தின் இரு தூண்கள்!

  தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

  Next Story
  ×