search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்- சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
    X

    தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்- சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

    • மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுகோள்.
    • பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

    சென்னை:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் நாளை (26.03.2023) ஞாயிறுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சத்தியாகிரக அறப்போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

    Next Story
    ×