search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவன்- தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலம்
    X

    கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவன்- தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலம்

    • பிரேத பரிசோதனை முடிவில் அம்சலேகாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • ராஜீவ்காந்தி வீட்டுக்கு ஏழுமலை அடிக்கடி வருவதுண்டு. அப்போது மகாலட்சுமிக்கும், ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்கிற ஏழுமலை (வயது 29). அவரது மனைவி அம்சலேகா (27). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் நிகில் என்ற மகன் உள்ளார்.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்சலேகா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று அம்சலேகாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை முடிவில் அம்சலேகாவின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏழுமலையை கண்காணித்தனர். மேலும் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஏழுமலையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலிக்காக ஏழுமலை தனது மனைவி அம்சலேகாவை கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. ஏழுமலைக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி மகாலட்சுமி என்பவருக்கும் தொடர்பு இருந்தது. ராஜீவ்காந்தி எலவனாசூர்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக உள்ளார். இவர் ஏழுமலையின் நண்பர் ஆவார்.

    அப்போது ராஜீவ்காந்தி வீட்டுக்கு ஏழுமலை அடிக்கடி வருவதுண்டு. அப்போது மகாலட்சுமிக்கும், ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த விபரம் ராஜீவ்காந்திக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்ட அம்சலேகாவுக்கு தெரியவந்தது.

    எனவே சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தனது மனைவி என்றுகூட பாராமல் கொடூரமாக தாக்கினார். இதில் அம்சலேகா மயங்கி விழுந்தார்.

    உடனடியாக தனது நண்பரான ஆஸ்பத்திரி ஊழியர் ராசுவ்காந்திக்கு தெரிவித்தார். அவர் விரைந்து வந்து மயக்கம் தெளிவதற்காக ஊசி போட்டார். ஆனாலும் அம்சலேகா எழுந்திரிக்கவில்லை. இந்த விபரத்தை ஏழுமலை தனது அக்காள் கணவர் ரவிகார்த்திக்கிடம் தெரிவித்தார். அவர் நேராக ஏழுமலை வீட்டுக்கு வந்தார். அப்போது அம்சலேகா இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க அவர்கள் அம்சலேகாவை கழுத்தை இறுக்கி அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்.

    ஊர் மக்களிடம் தனது மனைவி தற்கொலை செய்துவிட்டதாக கூறி நாடகமாடி உள்ளனர். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ஏழுமலை, ராஜீவ்காந்தி, மகாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவிகார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×