search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர அரசு தகவல்
    X

    சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர அரசு தகவல்

    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
    • ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.

    அதன்படி நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.

    ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் மே வரை 2½ டி.எம்.சி.கிருஷ்ணா தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் கிருஷ்ணா தண்ணீரை உடனே தருமாறு வலியுறுத்தவில்லை.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதின் காரணமாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியது.

    இப்போது கோடை காலமாக இருப்பதால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் கண்டலேறு அணையில் இப்போது 6 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. (கொள்ளளவு 68 டி.எம்.சி.) இதனால் கிருஷ்ணா தண்ணீரை இப்போது திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு கூறி உள்ளது.

    4 மாதமாக அணை திறக்கப்படாத நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் இப்போது 6.980 டி.எம்.சி. (கொள்ளளவு 13.213 டி.எம்.சி.)தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வருவதாலும் குடிநீரை கட்டுப்பாடின்றி வினியோகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தவிர குன்றத்தூர் திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் அதை வைத்து குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×