search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி தொகுதிக்கு மல்லுக்கட்டும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்
    X

    தென்காசி தொகுதிக்கு மல்லுக்கட்டும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×