search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்போடியா நாட்டில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
    X

    கம்போடியா நாட்டில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

    • கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.
    • சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

    அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் அதிகமானது.

    இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை கண்டுபிடித்தனர்.

    அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று கணக்கிடப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

    இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப் பொருள் கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய, போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.63 கோடி போதை பொருள் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×