search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குல்பதின் நைப் செயலை பார்த்து சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிட்டது: மிட்சல் மார்ஷ்
    X

    குல்பதின் நைப் செயலை பார்த்து சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிட்டது: மிட்சல் மார்ஷ்

    • கடைசியில் அது போட்டியினை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்த்தோம்.
    • அது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. போட்டி நன்றாக இருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளில் யார் அரையிறுதிக்கு முன்னேறுவது என்பதில் பலத்த போட்டி நிலவியது.

    வங்காளதேசத்தை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 116 ரன் இலக்கை 12.1 ஓவரில் எட்டினால் வங்காளதேசம் தகுதி பெறும். மாறாக 12.1 ஓவரில் எட்ட முடியாமல் வங்காளதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், வங்காளதேச அணியின் ஆட்டத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 116 எளிதான இலக்குதான். வங்காளதேசம் எப்படியும் எட்டிவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இரண்டு அணிகளையும் வெளியேற்றியது.

    வங்காளதேசம் சேஸிங் செய்யும்போது அடிக்கடி மழை குறுக்கீடு செய்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும் நிலை உருவாகியது. ஒரு சில நேரத்தில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் இருப்பதும், ஒரு சில நேரத்தில் வங்காளதேசம் முன்னிலையில் இருப்பதுமாக இருந்தது.

    இதனால் போட்டியின் முடிவு பரபரப்பானதாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மழை வருவதுபோல் இருந்தது. அப்போது வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 ரன்கள் முன்னிலை இருந்தது. அந்த நேரம் ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது.

    அப்போது ரஷித் கான் பந்து வீசிக் கொண்டிருந்தார். ஒருவேளை அடுத்த சில பந்துகளில் சிக்ஸ் அல்லது பவுண்டரி சென்றால் அது வங்காளதேசத்திற்கு சாதகமாக மாறிவிடும். இதனால் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட், ஆப்கானிஸ்தான் வீரர்களை பார்த்து போட்டியை மெதுவாக கொண்டு செல்லுங்கள் என சைகை காட்டினார்.

    இதை ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த குல்பதின் நைப் கவனித்துக் கொண்டார். ரஷித் கான் பந்து வீச தயாராகும்போது, தசைப்பிடிப்பு எனக் காலைப்பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். அவரது செயலை பார்த்து வர்ணனையாளர்கள் சிரித்தனர். பலர் விமர்சனம் செய்தனர்.

    இது பெரும் பேசும்பொருளாக மாறியது. என்ற போதிலும் இந்த செயல் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 ரன்னில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:-

    குல்பதின் நைப் செயலைப் பார்க்கும்போது எனக்கு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. கடைசியில் அது போட்டியினை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்த்தோம். அது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. போட்டி நன்றாக இருந்தது.

    அணியாகத்தான் அந்தப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இது வெளிப்படையாக ஒரு அற்புதமான போட்டி அல்லவா? போட்டியில் அதிகமான சுவாரசியங்களும் திருப்பங்களும் இருந்தன. எங்களின் கட்டுக்குள் இல்லாமல் போட்டி சென்றுவிட்டது. அதற்காக நாங்கள் எங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

    நாங்கள் உலகக் கோப்பையில் தொடர வேண்டுமென நினைதோம். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்களையும் வங்காளதேசத்தையும் வீழ்த்தியுள்ளார்கள். நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதியானவர்கள்.

    இவ்வாறு மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×