search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  வேண்டுதலை நிறைவேற்றும் பிடாரி கவுகாத்தியம்மன்
  X

  வேண்டுதலை நிறைவேற்றும் பிடாரி கவுகாத்தியம்மன்

  • அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் புன்னகை.
  • உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  பூமாதேவியின் மகனாக பிறந்த நரகாசுரன், பிராக்ஜோதிஷாபுரம் என்ற இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த ஊர் தற்போதைய அசாம் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் கவுகாத்தி ஆகும். அவன் மக்களை துன்புறுத்தி வந்ததைத் தொடர்ந்து, துவாபர யுகத்தில் கிருஷ்ண பகவான் தன் மனைவி சத்யபாமாவுடன், நரகாசுரன் இருப்பிடம் சென்று அவனை அழித்து மக்களை காத்தார். அவன் அழிந்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராணம் சொல்கிறது. கவுகாத்தியில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.

  பிற்காலத்தில் வடநாட்டில் வெற்றி கண்ட சோழமன்னன், அங்கே கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு தன் சேனைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தீபாவளி அன்று பிராக்ஜோதிஷாபுரம் சென்று, அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தினான். கிருஷ்ணரை மனமாற வேண்டிக்கொண்டு தனது படைகளுடன் மீண்டும் தன் தலைநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

  வழியில் நெய்தவாயல் என்ற பகுதியில் ஒரு மணற்பாங்கான நிலப்பரப்பில் வந்து கொண்டிருந்தபோது, சோழ மன்னனின் படைகளில் உள்ளவர்களுக்கு பெரும் களைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. "மன்னா.. நீங்கள் தற்போது செல்லும் பகுதி மிகவும் ஆபத்தானது. களைப்புடன் காணப்படும் உங்கள் படை வீரர்களும், குதிரைகளும் பலியாக வாய்ப்பு உள்ளது" என்றது அந்தக் குரல்.

  இதைக்கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றான் மன்னன். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். அவள் "கவுகாத்தி வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நீங்கள், புனித நீரை கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப் பகுதியில் கோவில் ஒன்றை அமைத்து, புனித தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி புனித நீரை தெளித்துச் சென்றால், உங்களுடைய பயணம் பாதிப்பின்றி அமையும். மேலும் நீங்கள் ஆட்சி செய்யும் பகுதி மேலும் சிறப்படையும்" என்று தெரிவித்து விட்டு, மறைந்தாள்.

  இதையடுத்து நெய்தவாயல் என்ற அந்த பகுதியில் ஒரு பெரிய குளத்தை தன் படை வீரர்களை கொண்டு வெட்டினான், சோழ மன்னன்.

  அந்த பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மன்னனின் கனவில், கவுகாத்தியில் தரினம் செய்த அம்மன் தோன்றினாள். எனவே அங்கே அமைத்த ஆலயத்தில் அம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு `கவுகாத்தி அம்மன்' என்று பெயரிட்டு வழிபாடு செய்தான்.

  அசாம் மாநில பிராக்ஜோதிஷாபுரம் கோவிலில் உள்ள கவுகாத்தி அம்மன் வடிவிலேயே இங்குள்ள அம்மனும் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையின் வலது பக்க கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கதாயுதம், அபய ஹஸ்த முத்திரை தாங்கியும், இடது பக்க கரங்களில் சங்கில் திரிசூலம், செந்தாமரை மலர் உள்ளிட்டவற்றுடன் எட்டு கரங்களைக் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

  இந்த அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் உள்ள புன்னகை, இந்த அம்பாளை சாந்த சொரூபிணியாகவும் காட்டுகிறது.

  சோழ மன்னனால் 16 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஊருணியாக அமைக்கப்பட்ட தீர்த்தம், இவ்வாலய தீர்த்தமாக விளங்குகிறது.

  என்றும் வற்றாத சுத்தமான, சுவையான நீருடன் தாமரை மலர்களால் நிரம்பிய புஷ்கரணியாக இது உள்ளது. விரதம் இருந்து இந்த புஷ்பகரணியில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால், தீவினைகள் அகலும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  இவ்வாலயத்தில் ஆடி மாத திருவிழா, பவுர்ணமி பூஜை, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் அம்மனாக, இந்த கவுகாத்தி அம்மன் இருக்கிறார்.

  இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

  அமைவிடம்

  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது, நெய்தவாயல் கிராமம். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் மீஞ்சூரில் நிற்கும். இங்கு இறங்கி, அங்கிருந்து அரசு பஸ் அல்லது ஆட்டோக்கள் மூலமாக 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நெய்தவாயலை அடையலாம்.

  Next Story
  ×