search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரத்தில் தெப்ப திருவிழா: 5-ந்தேதி தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி இல்லை
    X

    ராமேசுவரத்தில் தெப்ப திருவிழா: 5-ந்தேதி தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி இல்லை

    • 4-ம்தேதி பிள்ளையார் தெப்ப உற்சவம் நடக்கிறது.
    • அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் தைப்பூச தெப்பத் திருவிழா வருகிற 5-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) லெட்சுமண தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு 5-ம் தேதி ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும்.

    பின்னர் காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி லெட்சுமண தீர்த்தத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் 11 முறை சுவாமி- அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

    இதைதொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது. தெப்ப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ம் தேதி காலை 10 மணியிலிருந்து இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் தீர்த்தமாடவோ தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதுபோல் 4-ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிள்ளையார் தெப்ப உற்சவமும் தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×