search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தைத்தெப்ப உற்சவம்
    X

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தைத்தெப்ப உற்சவம்

    • சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
    • 5-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வீதி உலா வருகின்றனர்.

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தைத்தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    தெப்பத்திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை நடராஜர் ஊடல் நிகழ்ச்சியும், மாலை ஜம்புகேஸ்வரர் யாழி வாகனத்திலும், அம்மன் புலி வாகனத்திலும் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (3-ந் தேதி) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வருகின்றனர்.

    அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து மாலை 6.30 மணிக்குள் தெப்ப உற்சவம் கண்டருளுவார்கள். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைவார்கள்.

    தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வீதி உலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×