என் மலர்
உள்ளூர் செய்திகள்

காப்பகத்தில் இருந்து 2 மாணவர்கள் ஓட்டம்- திருவள்ளூரில் மீட்பு
- கச்சூரில் உள்ள காப்பகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
- இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.
திருவள்ளூர்:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கிருந்த 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். அவர்களை அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்தனர்.
இதற்கிடையே திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மற்றொருவர் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.
அவர்கள் கச்சூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்ததும், அங்கு இருக்க பிடிக்காததால் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.
திருவள்ளூர் வந்த அவர்கள் காலை முதல் திருவள்ளூர் ரெயில் நிலையம், வீரராகவர் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சுற்றித்திரிந்து உள்ளனர். இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.
2 மாணவர்களையும் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து காப்பக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.