search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை
    X

    நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை

    • நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்
    • அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கும் மேல் சேதம் விளைவிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர்பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.

    காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்பவெப்பநிலை, அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள், நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    எனவே அந்தக் களைகளை முழுவதுமாக அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீர்பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீர்நிறுத்தவும் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர்ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×