search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதிசய ஆலயம்!
    X

    அதிசய ஆலயம்!

    • மக்களோ ஆவுடையார் கோயிலென கோயிலின் பெயரையே ஊருக்கும் நிரந்தரமாக்கி விட்டார்கள்!
    • மற்ற கோயில்களில் சாமிக்கு படைக்கும் உணவை, பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டுசென்று ரகசியமாக காட்டுவார்கள்!

    பாரதத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்களும், மன்னர்களாலும் வள்ளல்களாலும் நிர்மாணிக்கப்பட்டவை! ஆனால் ஆவுடையார் கோயிலைக் கட்டியவர், அருள்ஞானக் கவிக்கதிர் மணிவாசகத் திருமகனார்!

    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றின் வடகரையில் பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் எனும் ஊரின் நட்டநடுவில் கட்டப்பட்டது ஆவுடையார்கோயில்.

    தமிழ் இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் அநாதிமூர்த்தித் தலம், ஆதிகயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஞானபுரம், திருமூர்த்திபுரம், பராசக்திபுரம் யோகவனம், சிவபுரம், திருப்பெருந்துறை என பலபல பெயர்கள் இந்த ஊருக்குச் சூட்டப்பட்டுள்ளன!

    மக்களோ ஆவுடையார் கோயிலென கோயிலின் பெயரையே ஊருக்கும் நிரந்தரமாக்கி விட்டார்கள்!

    மற்ற கோயில்களில் சாமிக்கு படைக்கும் உணவை, பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டுசென்று ரகசியமாக காட்டுவார்கள்!

    ஆவுடையார் கோயிலில் குடிகொண்ட ஆத்மநாதசாமிக்கு நமது வீடுகளில் அமரர்க்குப் படைப்பதைப் போலவே செய்கிறார்கள்!

    கருவறைக்கும் பக்தர்கள் எல்லைக்கும் நடுவில் வெளியரங்கமாக ஒரு படையல் மேடை, எல்லாரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது!

    ஆவி பறக்கப் பறக்கப் புழுங்கல் அரிசிச் சோற்றை கொண்டுவந்து இந்தப் படையல் மேடையில் குன்றுபோலக் கொட்டுகிறார்கள்! அப்பம், அதிரசம், தேன்குழல் பலகாரங்களை சூழ வைக்கிறார்கள். ஆவி பறக்கும் படையலுக்கு தீப ஆராதனை செய்து பக்தர்களுக்கும் படையல் தரிசனம் படைக்கிறார்கள்!

    சிவாலயம் எனில் கொடிமரம் இருக்கும் நந்தி இருக்கும், பலிபீடம் இருக்கும் கருவறையில் சிவலிங்கம் இருக்கும், உற்சவமூர்த்தியும் இருக்கும்!

    மாணிக்க வாசகப் பெருமகனார், கலை இழைத்துக் கட்டிய சிலைமிளிரும் ஆவுடையார் கோயிலில் சிவனுக்கான உற்சவமூர்த்தி இல்லை கருவறையில் லிங்கம் இல்லை, பலிபீடம் இல்லை, கொடிமரமும் இல்லை!

    பிறவா யாக்கைப் பெரியோன் உருவமற்றவன் என்ற கொள்கையின் வெளிப்பாடாய் அமைக்கப்பட்ட கருவறையில் சிறிய ஆவுடைப் பீடம், அதன் மேல் அழகிய குவளையைச் சாற்றி அலங்காரம் செய்து காட்சிப்படுத்தினார் தீபம் காட்டுகிறார்கள்! காட்டிய தீபத்தை ஒற்றிக் கொள்ள நம்மிடம் கொணர்வதில்லை! பிரசாதமாக திருநீறு மட்டுமே!

    ஆமாம் அய்யன் ஆத்மநாதரையும் அம்மன் யோகாம்பிகையையும் சிந்தனை உளியில் நாம்தான் செதுக்கி வணங்க வேண்டும்!

    வருடத்திற்கு இருமுறை நடக்கும் திருவிழாக்களில், நான்கு தேவபாட்டைகளிலும் பவனிவரும் உற்சவ மூர்த்தி யார்?

    அது மாணிக்கவாசகரின் மூர்த்தி! இது சிவ மகாகவிக்குக் கிடைக்கின்ற செம்மைச் சிறப்பு! கோயிலுக்குள்ளும் மணிவாசகரை வணங்கிய பிறகு தான் ஆத்மநாதர் எனும் அரூபத்தை வணங்கவேண்டும்!

    - ஆறாவயல் பெரியய்யா

    Next Story
    ×