search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?
    X

    தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?

    • வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை.
    • தாக உணர்வை ஏற்படுத்தும் நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.

    உணவு, காற்று போல மனிதன் உயிர்வாழ அத்தியாவசியத் தேவையாக இருப்பது "நீர்"

    நீரை தினமும் எவ்வளவு அருந்த வேண்டும்?

    அவரவர் தேவைக்கு ஏற்பத் தான்.

    வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, உடல் கொண்ட நோய்கள் , அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் பிறகு எதற்காக? தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி.

    சரி நமது உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது?

    தண்ணீர் தேவை என்று அனிச்சையாக எழும் "தாக உணர்வை" வைத்துத் தான்.

    நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பதாகும்.

    உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் தூண்டப்படுவோம்.

    உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்துவது சிறப்பானது சரியானதும் கூட.

    வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. தாக உணர்வை ஏற்படுத்தும் இந்த நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.

    அவர்களுக்கு தாங்கள் சரியாக நீர் அருந்துகிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கு இருக்கும் வழிமுறைகள்..

    மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    பகலில் விழித்திருக்கும் போது (காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை ) ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.

    இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.

    ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் செல்வது நல்லதல்ல.

    இதற்கடுத்த படியாக சிறுநீரின் நிறத்தை வைத்து நம்மால் நீர் சத்து உட்கொள்ளலின் அளவை அறிந்து கொள்ள முடியும் .

    சிறுநீர் - சுத்த வெள்ளை நிறமாக அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நாம் நீர் குடிக்கும் அளவுகள் சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்.

    சிறுநீர் - அடர் மஞ்சள் / பழுப்பு நிறம்/ சிவப்பு நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். சில நேரங்களில் உட்கொள்ளப்படும் மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு நீர்க்கடுப்பு உண்டாகும். இதுவே சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்.

    வயது வந்த ஒரு மனிதன் - தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது.

    காலை எழுந்ததும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் அருந்துவதால் பலன் பாதகம் என்ன?

    இரவு பல மணிநேரங்கள் நீர் அருந்தாமல் இருப்பதால் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர் - அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம்.

    நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் - தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம். இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

    தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை. அதிகாலை நீர் அருந்துவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் வெளியேற்றப்படுமாமே?

    பல்வேறு வளர்சிதை மாற்ற விளைவுகளால் ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால் சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றி விடும்.

    உதாரணம் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மிதமிஞ்சி ஏறும் போது சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை. நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும். எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் நிர்வகிக்கும்.

    நாம் பருகும் நேரடியான நீர் அன்றி ஒருநாளில் பருகும் காபி / டீ ஊற்றிக்கொள்ளும் குழம்பு , குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய் , நீர்ப்பழம் போன்ற பழங்களில் உள்ள அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும்.

    இதய செயலிழப்பு,சிறுநீரக நோய், கல்லீரல் நோய் இருப்பவர்கள் அவரவர் மருத்துவர் பரிந்துரைத்த நீர் அளவுகளை உட்கொள்ள வேண்டும்.

    -டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×