search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்க சி.டி.ரவி எதிர்ப்பு
    X

    எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்க சி.டி.ரவி எதிர்ப்பு

    • கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.

    கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா சென்றார்.

    விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இதனால் எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.

    அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்து சமுதாய ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இந்த சூழலில் விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் தோரனகல்லில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அவர் அங்கிருந்து கார் மூலம் செல்லகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    Next Story
    ×