என் மலர்
இந்தியா

வணிக வளாகத்தில் தீ விபத்து- கால் சென்டர் ஊழியர்கள் 6 பேர் பலி
- ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.
- தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ஆர்பி சாலையில் 8 அடுக்கு மாடிக் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
5-வது தளத்தில் கால் சென்டர் இயங்கி வருகிறது.நேற்று இரவு 8-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென 7,6,5-வது தளங்களுக்கும் வேகமாக பரவியது. தீ விபத்தை கண்ட வணிக வளாகத்தில் இருந்தவர்கள அலறி அடித்துக் கொண்டு கீழேஇறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தும் உயிர் தப்பி ஓடினர்.
ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.
இதனால் கால் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் தீயில் வெடித்து சிதறியது.
இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் கால் சென்டரில் சிக்கி இருந்த 18 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பெயர், விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கால் சென்டர் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.