search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு காரணமான மோடி பெயருடைய எம்.எல்.ஏ.
    X

    ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு காரணமான மோடி பெயருடைய எம்.எல்.ஏ.

    • பிரதமர் மோடியை போலவே பூர்னேஷ் மோடியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
    • ராகுல் காந்தியின் கருத்துகளால் பிரதமர் மோடி மட்டுமல்ல மோடி சமூகத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டு உள்ளது.

    சூரத்:

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரசார பொது கூட்டத்தில் ராகுல் காந்தி எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என்று விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை காங்கிரசார் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மோடி என்று குறிப்பிட்டதாலே அவரது பதவி இழந்து உள்ளார். இதன் பின்ணனியிலும் ஒரு மோடி இருந்துள்ளார் என்பது தான் விசித்திரம். அவர் பிரதமர் மோடி இல்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் தொகுதி எம்.எல்.ஏ. தான். இவரது பெயர் பூர்னேஷ் மோடி. இவர் தான் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கொடுத்தவர்.

    இவருக்கும், பிரதமர் மோடிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. பிரதமர் மோடியை போலவே பூர்னேஷ் மோடியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற டீ விற்பனை செய்தார். மேலும் அன்றாட கூலி வேலையும் செய்து வந்தார்.

    கஷ்டத்துக்கு இடையே அவர் 1992-ம் ஆண்டு இளங்கலை சட்டம் படித்து எல்.எல்.பி. பட்டம் பெற்றார். அதன்பிறகு அவர் பாரதிய ஜனதா மீதான பற்றுதல் காரணமாக அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.

    சாதாரண தொண்டராக இருந்த அவர் படிப்படியாக உயர்ந்து பா.ஜ.க பூத் கமிட்டி ஒருங்கிணைபாளர் ஆனார்.

    பின்னர் அவர் சிறந்த வியாபார தளமாக திகழும் சூரத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட் டார். மேலும் அம்மாநில போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சிவில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்தவர். இவர் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. வகுப்பினரின் முகமாக உள்ளார்.

    ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்? என்பது குறித்து பூர்னேஷ் மோடி கூறும் போது, ராகுல் காந்தியின் கருத்துகளால் பிரதமர் மோடி மட்டுமல்ல மோடி சமூகத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டு உள்ளது. இதனால் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததாக கூறி உள்ளார்.

    Next Story
    ×