search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நீறில்லா நெற்றி பாழ்!
    X

    நீறில்லா நெற்றி பாழ்!

    • பசுஞ்சாணத்தை வெய்யிலில் காயவைத்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது.
    • முக்கியமாக நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம் தலையில் இருக்கும் ஈரம் உறிஞ்சப்பட்டு விடும். அதனால் சளி போன்ற தொந்தரவுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    வாழ்க்கை நிலையற்றது. என்றேனும் ஒருநாள் கட்டாயம் உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும். எனவே நாம் உயிருடன் இருக்கும்போதே தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதம் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தி நம்மை நன்னெறிகளில் தூண்டவே திருநீறு அணியப்படுகிறது.

    ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் திருநீற்றுச் சாம்பலைப் போலவே உடலும் சாம்பலாகும் என்பதை நினைவில் கொண்டு நற்சிந்தனைகளோடு வாழவேண்டும் என்பதை அணியும்போதெல்லாம் நினைவுபடுத்துகிறது புனிதமான திருநீறு.

    பசுஞ்சாணத்தை வெய்யிலில் காயவைத்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது. திருநீறுக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு.


    முக்கியமாக நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம் தலையில் இருக்கும் ஈரம் உறிஞ்சப்பட்டு விடும். அதனால் சளி போன்ற தொந்தரவுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    சைவ ஆலயங்களில் சிவ லிங்கத்திற்கும் முருகப் பெருமானுக்கும் சந்தனக் காப்பு சார்த்துவதைப் போல, விபூதிக் காப்பும் சார்த்துவதுண்டு. விபூதிப் பிரசாதத்தை வில்வ இலைகளிலும் வெற்றிலையிலும் வைத்து வழங்கும் வழக்கமும் சில ஆலயங்களில் கடைப் பிடிக்கப் படுகிறது.

    தமிழ் மூதாட்டி அவ்வையார் இயற்றிய நல்வழி என்ற நீதி நூலில் வரும் ஒரு நேரிசை வெண்பா திருநீறு இடாத நெற்றி பாழானது என்கிறது.

    `நீறில்லா நெற்றிபாழ்

    நெய்யில்லா உண்டிபாழ்

    ஆறில்லா ஊருக்கு

    அழகுபாழ் - மாறில்

    உடன்பிறப் பில்லா

    உடம்புபாழ் பாழே

    மடக்கொடி இல்லா மனை!'

    திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், மனைவியினால் இல்லமும், சிறப்படையும் என்றும், இதெல்லாம் இல்லாவிட்டால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றும் சொல்கிறது இந்த வெண்பா.

    பதினெண் சித்தர்களுள் ஒருவரான மகான் திருமூலர் எழுதிய திருமந்திரம் என்ற ஞான நூல் திருநீற்றின் பெருமையைப் பேசுகிறது. திருநீறு அணிவதால் ஒருவன் செய்த தீவினைகள் யாவும் நீங்கி அவன் சிவபெருமானின் திருவடியைச் சென்று சேரலாம் என உறுதிபடக் கூறுகிறது திருமந்திரத்தில் வரும் ஒரு பாடல்:

    `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

    மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

    தங்கா வினைகளும் சாரும் சிவகதி

    சிங்கார மான திருவடி சேர்வரே!'

    கூன்பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்ப்பதற்காக அவன் உடல் முழுதும் திருநீறு பூசி திருநீற்றுப் பதிகம் பாடி சிவபெருமானைத் துதித்தார் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர். திருநீற்றின் மகிமையால் வெப்ப நோய் முற்றிலுமாகத் தீர்ந்து பாண்டிய மன்னன் பூரண குணமடைந்தான்.


    `மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

    தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல

    வாயன் திருநீறே!'

    என்ற முதல் பாடலுடன் தொடங்கும் திருநீற்றுப் பதிகம், திருநீற்றின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது. அனைவரும் திருநீறு அணியுங்கள் என அறைகூவிச் சொல்கிறது.

    இன்றும் நெற்றியில் திருநீறு பூசி, ஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தை நாள்தோறும் ஓதினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது அடியவர்கள் நம்பிக்கை.

    அறுபத்து மூவரில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் அடியவர்கள் அணியும் திருநீற்றுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து மதித்தவர். அவரைப் போரில் வெல்ல முடியாத முத்தநாதன், அவரது சிவபக்தியை அறிந்து அவரை ஏமாற்றிக் கொல்ல நினைக்கிறான்.

    திருநீறு பூசி அடியவர் போல் வேடமிட்டு வந்து இரவில் அவரைச் சந்திக்கிறான். அவனது திருநீற்றுக் கோலத்தைப் பார்த்து அடியவர் என்றே கருதி வணங்குகிறார் மெய்ப்பொருள் நாயனார். அவன் மறைத்து வைத்திருந்த வாளால் அவரைக் கொல்கிறான் என வளர்கிறது மெய்ப்பொருள் நாயனாரின் திருச்சரிதம்.

    `மெய்யெலாம் நீறு பூசி

    வேணிகள் முடித்துக் கட்டி

    கையிலே படைகரந்த

    புத்தகக் கவளி ஏந்தி

    மைபொதி விளக்கே அன்ன

    மனத்திடைக் கறுப்பு வைத்து

    பொய்த்தவ வேடம் கொண்டு

    புகுந்தனன் முத்த நாதன்'

    என முத்தநாதனின் பொய்த்தவ வேடத்தை விவரிக்கிறது பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவரான சேக்கிழாரின் பாடல்.


    ஏனாதிநாத நாயனார் சரிதத்திலும் திருநீறு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அவரைக் கொல்ல நினைத்த அதிசூரன், திருநீறு தாங்கிய நெற்றி உடையோரை அவர் ஒருபோதும் கொல்ல மாட்டார் என்பதை அறிந்து கொள்கிறான்.

    தனித்துப் போர்புரிய வருமாறு அறைகூவி அவரை அழைக்கிறான். போரிட வந்தவர் முன் திருநீறு தரித்த நெற்றியோடு நிற்கிறான் அதிசூரன். அவனைக் கொல்லாது நின்ற ஏனாதிநாத நாயனாரை அவன் கொல்கிறான் என விரிகிறது ஏனாதிநாத நாயனார் திருச்சரிதம்.

    `தீங்கு குறித்தழைத்த தீயோன் திருநீறு

    தாங்கிய நெற்றியினார் தங்களையே

    எவ்விடத்தும்

    ஆங்கவரும் தீங்கிழையார் என்ப

    தறிந்தானாய்ப்

    பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்

    வெண்நீறு நெற்றி விரவப் புறம் பூசி

    உள்நெஞ்சில் வஞ்சக் கறுப்பும்

    உடன்கொண்டு

    வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை

    கைக்கொண்டு

    புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன

    இடம் புகுந்தான்'

    என முன்னர் திருநீறு பூசாதவன் இப்போது நெற்றியில் நீறு பூசிப் போருக்கு வந்தான் என்று அவன் வந்த காட்சியை விவரிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

    சீர்காழியில் உண்ணாமுலை அம்மையின் மூலம் ஞானப்பால் அருளப்பெற்ற திருஞான சம்பந்தர் மூன்று வயதில் பாடிய தனது முதல் பாடலில் சிவபெருமானை சுடலைப் பொடியாகிய திருநீறைப் பூசிக்கொண்டு என் உள்ளம் கவர் கள்வன் எனப் போற்றுகிறார்.

    `தோடுடைய செவியன்

    விடையேறியோர்

    தூவெண் மதிசூடி

    காடுடைய சுடலைப்

    பொடிபூசி

    என் உள்ளம் கவர் கள்வன்

    ஏடுடைய மலரான்முனை

    நாட் பணிந்து

    ஏத்த அருள்செய்த

    பீடுடைய பிரமாபுரம்

    மேவிய

    பெம்மான் இவன் அன்றே`

    தலபுராண வேந்தர் என அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தாம் எழுதிய தலபுராணம் ஒன்றில் சிவபெருமானின் திருநீறை மையமாக வைத்து ஒரு கற்பனையைப் பின்னுகிறார். பிள்ளையவர்களின் அந்த அழகிய கற்பனை நம்மை வியக்க வைக்கிறது.

    சிவபெருமான் திருநீறணிய முற்பட்டார். அப்போது, அவர் தம் விரல்களில் எடுத்த அந்தத் திருநீற்றின் துகள் அவர் கழுத்திலிருந்த பாம்பின் கண்ணில் சிறிது விழுந்து விட்டதாம். அதனால் அந்தப் பாம்பு கோபம் கொண்டு சீறியதாம். பாம்பு ஏன் சீறுகிறது என்றறிய விழித்துப் பார்த்ததாம் நெற்றிக் கண்.

    நெற்றிக் கண் திறந்தால் நெருப்புப் பொறி தோன்றுமே? அப்படி நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட நெருப்புப் பொறி சிவபெருமான் தலையில் அணிந்திருந்த பிறை நிலவின் மேல் பட்டுவிட்டதாம்!

    அமுதைப் பொழியும் நிலவு என்றல்லவா அது சொல்லப்படுகிறது? அந்தப் பிறை நிலவு, நெருப்புப் பொறிபட்ட உஷ்ணத்தால் சற்று உருகியதாம். அப்போது அதன் அமுதத் துளி சிவபெருமான் இடையில் கட்டியிருந்த புலித்தோலில் பட்டதாம்.

    அமுதத் துளி பட்டால், உயிரிழந்தவை கூட உயிர் பெற்றுவிடுமே? அதன்பின் புலித்தோல் வெறும் தோலாகவா இருக்கும்? அமுதத்தால் அதற்கு உயிர் கிட்டிவிட்டது. எனவே புலித்தோல் உண்மையான புலியாகவே மாறி விடுகிறது!

    அந்த நிஜப் புலியைப் பார்த்த சிவபெருமானின் வாகனமான காளை மாடு மிரண்டு ஓடுகிறது என்று தன் கற்பனைச் சித்திரத்தைத் திருநீறில் தொடங்கி சிவன்மேல் வைத்துப் தீட்டியுள்ளார் தமிழ்த் தாத்தாவின் ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

    சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவிக்கு இந்துமதச் சடங்குகளில் தீவிர ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தன. சரஸ்வதி பூஜையன்று ஹோம குண்டத்தில் இருக்கும் திருநீற்றுச் சாம்பலை நெற்றியிலும் கைகளிலும் பூசிக் கொண்டு செருப்பணியாத பாதங்களோடு அவள் கொல்கத்தா நகர வீதிகளில் வெய்யிலில் நடந்து செல்வாள் என்பதை நிவேதிதையின் புனித வரலாறு நமக்குச் சொல்கிறது.

    எம்.பி. சிவம் எழுதி டி.எம். சவுந்தரராஜன் பாடியுள்ள பக்திப் பாடல் ஒன்று திருநீற்றின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது.

    `கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி

    ஓடிவிடும்

    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை

    நாடிவரும்

    சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திரு

    நீறணிந்தால்

    வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப்

    போய்விடுவாள்

    அந்தநேரம் பார்த்திருந்த அன்னை

    செல்வம் ஓடிவந்து

    சிந்தை குளிர வைத்து சொந்தம்

    கொண்டாடிடுவாள்

    மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை

    இருக்குதடா

    மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப்

    பெருக்குதடா

    தினம்தினம் நெற்றியிலே திருநீறு

    அணிந்திடடா

    தீர்ந்திடும் அச்சமெலாம் தெய்வம் துணை

    காக்குமடா!'

    நெற்றியில் திருநீறு அணிவதால், மூத்தவளான மூதேவி நம்மை விட்டு விலகிச் சென்று விடுவாள் என்றும் அந்த நேரத்தில் இளையவளான திருமகள் நம் இல்லம் தேடிவந்து நம் சிந்தையைக் குளிரவைப்பாள் என்றும் சொல்கிறது இந்தப் பாடல்.

    வாரியார் சுவாமிகள் நெற்றி நிறையத் திருநீறு பூசும் வழக்கமுடையவர். அவர் தோற்றமே அவர் சிவனடியார் என்பதைப் புலப்படுத்தும்.

    ஒருவன் அவரிடம் நெற்றியில் வெள்ளை அடித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே எனக் குறும்பாய் வினவினான்.

    `நன்கு கட்டப்பட்ட வீட்டுக்குத்தான் வெள்ளையடிப்பார்கள், உன்போன்ற குட்டிச் சுவருக்கு வெள்ளை அடிக்க மாட்டார்கள்!` என்று சொல்லி வாரியார் சுவாமிகள் அவன் வாயை அடக்கினார்!

    எல்லா மங்கலங்களையும் தரவல்ல திருநீற்றை நெற்றியில் அணிந்து, இறைவனை வழிபட்டு, அதன்மூலம் மனத்தில் சாந்தியும் நிம்மதியும் அடைவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×