search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்- 62
    X

    கருணை தெய்வம் காஞ்சி மகான்- 62

    • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • அன்றைய தினம் பெரியவாளைத் தரிசிக்க காஞ்சி ஸ்ரீமடத்தில் திரளான பக்தர்கள் காணப்பட்டனர்.

    'அன்றைய தினம் பெரியவாளைத் தரிசிக்க காஞ்சி ஸ்ரீமடத்தில் திரளான பக்தர்கள் காணப்பட்டனர். கூடி இருந்த அன்பர்களுள் குறிப்பிட்டுச் சொல்லும்படி நைஜீரியாவில் இருந்து ஒரு பிராமணர் வந்திருந்தார்.

    டாக்டர் கல்யாணராமனும் தன் மனதில் இருக்கும் குழப்பம் அகல வேண்டி வந்திருந்தார்.

    பெரியவா பேசத் துவங்கிய விஷயத்தை செவி மடுக்கும் விதமாக பக்தர்கள் அனைவரும் மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    டாக்டர் கல்யாணராமனைப் பார்த்து, சோழ தேசத்தை ஆண்ட ஒரு ராஜாவுக்கு நேர்ந்த அனுபவம் பற்றிப் பெரியவா சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அதைக் கேட்கத்தான் கூடி இருந்த பக்தர்கள் அனைவருக்கும் இத்தனை சுவாரஸ்யம்.

    தன் பேச்சைப் பெரியவா தொடர்ந்தார்:

    ''பாரத தேசத்திலே சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை அந்த சோழ ராஜாவுக்கு. அதாவது, சொந்த ஊரிலே வரன் கிடைக்கவில்லை. எனவே, அயல் தேசத்தில் மாப்பிள்ளை தேடினான்.

    கம்போடிய தேசத்து இளவரசர் மாப்பிள்ளையாக அமைந்தார். திருமணம் நம் தேசத்தில் நடந்தது. திருமணம் முடிந்ததும், தம்பதி சமேதராக இருவரும் கம்போடியா செல்ல ஆயத்தமானார்கள்.

    இவர்களுடன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேத பண்டிதர்கள், இளவரசியின் அன்றாட செயல்பாடுகளுக்கு உதவ வேண்டி நிறைய பணிப்பெண்கள், இன்ன பிற வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் என்று பலரும் கப்பலில் கம்போடியாவுக்குப் புறப்பட்டார்கள்.

    கப்பலில் கம்போடியாவுக்குப் போன வேத பண்டிதர்கள் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள். அதன் பின் இந்தியாவுக்குத் திரும்பினார்கள்.

    இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் அழகாக டாக்குமெண்ட் செய்திருக்கிறார் அந்த பிரெஞ்ச் சரித்திர ஆசிரியர். தான் எழுதிய நூலில் இந்தக் கல்யாணம் பற்றியும், கம்போடியாவுக்குப் போனவர்களின் தினசரி நடவடிக்கைகள் பற்றியும் விவரமாக எழுதி உள்ளார்.

    ஆனால், அந்த நூலில் கம்போடியாவுக்குப் போன வேத பண்டிதர்கள் அங்கே ஏதாவது பிராயச்சித்தம் செய்தார்களா என்றும், அல்லது அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு இங்கே பிராயச்சித்தம் ஏதும் செய்தார்களா என்றும் குறிப்பிடவே இல்லை.''

    - சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்தினார் பெரியவா.

    பிறகு, டாக்டர் கல்யாணராமனைப் பார்த்து, ''இந்த நாட்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று சேர எவ்வளவு நாட்கள் ஆகும்?'' என்று கேட்டார்.

    ''ஒரே விமானத்தில் நேரடியாகப் பயணிக்கிறோம் என்றால், சுமாராக பதினெட்டு மணி நேரம் ஆகும் பெரியவா. அதே சமயம் இடையில் லண்டனில் இறங்கி இன்னொரு விமானம் மாறிப் பயணிக்க வேண்டும் என்றால், சுமார் இருபத்துநான்கு மணி நேரம் ஆகலாம் பெரியவா.''

    இதன் பின் ஒரு சில விநாடி அமைதி நிலவியது. பிறகு, பெரியவா பேசத் துவங்கினார்.

    ''நமது சாஸ்திரங்களிலே என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ஒருவர் நித்ய கர்மானுஷ்டானம் (நித்தமும் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், சமிதாதானம் மற்றும் அக்னி ஹோத்ரம் போன்றவை) மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் செய்யவில்லை என்றால் அவர் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அந்த நாட்களில் ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்ய வேண்டிய கர்மானுஷ்டானங்களை தவறாமல் செய்து வந்தார்கள்-இதைச் சொல்லும்போதே இப்போதெல்லாம் அந்த அளவுக்கு எவரும் செய்வதில்லை என்கிற பெரியவாளின் ஏக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். பெரியவா சொன்னது 1975-ல். ஆனால், இன்றைய காலத்திலோ அது கேள்விக்குறிதான். கடல் பயணம் செய்கிறபோது பிராமணர்கள் நித்ய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு சிரமங்கள் பல இருக்கும்.

    குளிப்பதற்கு சுத்தமான ஜலம் அப்போது கிடைக்காது. அதனால், அவர்கள் குளித்து விட்டு இவற்றையெல்லாம் செய்திருக்க வாய்ப்பில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து அனுஷ்டானங்கள் செய்யவில்லை என்றால், பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் பிராயச்சித்தம் செய்ததாக நூலாசிரியர் குறிப்பிடவில்லை.

    ஒருவேளை கம்போடியாவுக்கு கப்பலில் அவர்கள் இரண்டு நாட்களில்கூடச் சென்றிருக்கலாம்.

    இலங்கையில் இருந்து அயோத்திக்கு ராமபிரான் சில மணி நேரங்களிலேயே சென்றிருக்கலாம்.

    அதனால் இவர்களுக்குப் பிராயச்சித்தம் தேவைப்படாமல் போயிருக்கலாம்.

    அந்த விதி இன்றைக்கும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டால், இந்தக் கூட்டத்தில் இருப்பவர்களில் சிலர் ஒரே வருடத்தில் பல முறை பிராயச்சித்தம் செய்யும்படி நேரிடலாம். ஏனென்றால், தொடர்ந்து மூன்று நாட்கள் சந்தியாவந்தனம் செய்யத் தவறியதால்!

    ஒருவர் வெளிநாடு சென்றால் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளதால், 'எதற்கு வெளிநாடு செல்ல வேண்டும்? எதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?' என்று ஆசாரத்துடன் வாழ்ந்து வரும் பலர் அயல்தேசம் செல்வதே இல்லை.''

    இத்தனை விளக்கமாக பெரியவா அங்கே பேசியது, ஒருவேளை தனக்காகவே இருக்குமோ என்று நெகிழ்ந்து போனார் டாக்டர் கல்யாணராமன்.

    பிராயச்சித்தம் என்பது ஒரு பரிகாரம்.

    ஒரு தவறைச் செய்து விட்டு 'சாரி...' சொல்வது போல்!

    ஏன் தவறு செய்ய வேண்டும்? ஏன் 'சாரி' சொல்ல வேண்டும்?

    எனவேதான், சாஸ்திர சம்பிரதாயத்துடன் வாழ்ந்து வரும் பல அந்தணர்களுக்கு வெளிநாடு செல்ல உத்தரவு கொடுக்கவில்லை பெரியவா. 'இன்னார் வெளிநாடு செல்வதால் பலருக்கும் பலன் இருக்கிறது' என்றால் மட்டுமே, சில பல நிபந்தனைகளுடன் அவர்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கிறார்.

    இங்கே ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    மகா பெரியவா ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டால், அதற்கு மறுப்போ மாற்றோ கிடையாது என்பது சத்தியம்.

    என்றாலும், வேத நெறிப்படியும் மகா பெரியவா சொன்ன வழிமுறைப்படியும் இன்றைக்கும் வாழ்ந்து வருகிற பண்டிதர்கள் சொல்கிற ஒரு விஷயத்தையும் கவனிப்பது அவசியம்!

    பிராமணர்கள் வெளிநாடு செல்வது பற்றி இன்றைய வேத பண்டிதர்கள் என்ன சொல்கிறார்கள்?

    ''பெரியவா ஒரு விஷயத்தைச் சொன்னால் அதற்கு மறுப்பில்லை. அந்த மகானது ஒவ்வொரு வார்த்தையும் அட்சர லட்சம் பெறும். என்றாலும், அன்றைய காலகட்டத்தில் - குறிப்பிட்ட அந்த நேரத்தில் பல விஷயங்களை முழுமையாக பெரியவாளால் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். அதற்கான நேரம் அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது சப்ஜெக்ட்டை விட்டுப் பெரியவா பேச்சும் மாறி இருக்கலாம். சந்தியாவந்தனம் செய்யாமல் இருந்து விட்டார் என்பதனால் மட்டுமல்ல. கடல் கடந்து ஒருவர் சென்றாலே அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். 'இத்தனை மணி நேரம் விமானப் பயணம்தான்' என்றில்லை. கடல் கடந்து சென்று விட்டு பாரதம் திரும்பியவர்கள் உரிய பண்டிதர்களைக் கலந்தாலோசித்து விட்டு, ஒரு ஹோமம் செய்ய வேண்டும்.

    இந்த ஹோமத்தின்போது அனுஷ்டிக்கப்படுகிற ஜபத்தினால், கடல் கடந்து சென்று வந்தவருக்கு பிராயச்சித்தம் கிடைத்து விடும். இதுபோல் அடுத்த தடவை மீண்டும் கடல் கடந்து சென்றாலும், திரும்பிய பின் அவசியம் ஹோமம் செய்ய வேண்டும். கடல் கடந்து செல்கிறோமே என்கிற சஞ்சலம் உள்ளவர்கள், உரிய பண்டிதர்களை கலந்தாலோசித்தாலே போதும்.''

    'நமக்கு சாதகமாக இருக்கிறதே' என்று எதையும் சுலபத்தில் எடுத்துக் கொண்டு விடக் கூடாது. எதையும் ஒரு முறைக்குப் பல முறை அலசி ஆராய வேண்டும். நமது சொகுசான வாழ்க்கைக்கு ஒரு பொருளை (கார், டி.வி., கம்ப்யூட்டர் போன்றவை) வாங்கப் போகிறோம் என்றால், ஒரு கடைக்குப் பத்து கடைகளில் விசாரித்து அதன் பின்தான் வாங்குகிறோம். ஏனென்றால், இந்தப் பொருள் வாங்குவதில் எவ்வளவு பணம் மிச்சம் பண்ண முடியுமோ, அத்தனை பணத்தை மிச்சம் பண்ண வேண்டும் என்ற வேட்கைதான்!

    அதுபோல்தான் சாஸ்திரம், தர்மம் சம்பந்தப்பட்ட செயல்களிலும் இருக்க வேண்டும். நமக்குத் தோதாக ஒருவர் சொல்லி விட்டாரே என்று அத்துடன் விட்டு விடக் கூடாது. ஒரு பண்டிதருக்கு நாலு பண்டிதரிடம் கேட்க வேண்டும். என்ன ஒன்று... அந்த பண்டிதர் சத்தானவராக இருக்க வேண்டும்.

    எதையும் அது சொல்லியபடி செய்தோம் என்றால், நமக்கு எந்த விதமான தோஷமும் இல்லை. பிராயச்சித்தமும் இல்லை!

    நற்காரியங்கள் செய்து, சாஸ்திர தர்மப்படி வாழ்ந்து வருகிறவருக்குப் பெரியவா என்றென்றும் துணை இருப்பார்!

    (தொடரும்)

    swami1964@gmail.com

    Next Story
    ×