search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டணி கட்சிகளை நம்பி அ.தி.மு.க. இல்லை: எடப்பாடி பழனிசாமி
    X

    கூட்டணி கட்சிகளை நம்பி அ.தி.மு.க. இல்லை: எடப்பாடி பழனிசாமி

    • டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும், தண்ணீர் வற்றினால் சென்று விடும்.

    அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டு இருக்கும் கட்சியை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல ராமதாஸ் ஒரு பேட்டியின்போது பா.ஜனதாவிற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்சியில் இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கின்ற கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் வராவிட்டாலும் எங்களுடைய சொந்த பலத்தில் நிற்போம். நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அடித்தளம் போட்டது.

    எனவே நாங்கள் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சி நடத்தவில்லை.

    ஒரு ரூபாய் செலவு செய்கிறாரா? இல்லையா? என்பதை அண்ணாமலையை பின்தொடர்ந்து சென்று பாருங்கள். ஒரு ரூபாய் செலவு செய்யாமல் தேனீர், தண்ணீர் கூட குடிக்க முடியாது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சி செலவு செய்வார்கள். தேர்தல் ஆணையமும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள் விற்பனையை தி.மு.க. நிர்வாகிகளே செய்கின்றனர். அவ்வாறு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×