search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை
    X

    சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் சிறுத்தையை பற்றி தவறான தகவல்களை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×