search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
    • இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.

    இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி.

    அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

    உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

    இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

    10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

    மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுமாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார்.

    சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.

    மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.

    மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×