search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரு வருடம் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய திருவிழா: அமைச்சர் ஏற்பாட்டில் 4-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஒரு வருடம் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய திருவிழா: அமைச்சர் ஏற்பாட்டில் 4-ந்தேதி தொடங்குகிறது

    • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும்.
    • தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு இலக்கிய திருவிழாவாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டாடப்படுகிறது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எத்திசையும் புகழ் மணக்கும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை பாராண்டு தமிழ் செய்த நூறாண்டு தலைவருக்கு ஓராண்டு முழுவதும் விழா கொண்டாடுகிறோம்.

    கவியரங்கம், கருத்தரங்கம்-இசையரங்கம், இனிய தமிழ்ப் பாட்டரங்கம், சொல்லரங்கம், வல்லரங்கம், தெம்மாங்குத் தேனரங்கம், பட்டிமன்றம்-பாவையர் மன்றம், பட்டொளிவீசும் பகுத்தறிவு மன்றம், மாண்பு நிறை மாணவர் மன்றம், கான மன்றம், கானா மன்றம், கவிதை மன்றம், கருத்தியல் மன்றம், அறிவுடை மன்றம், ஆன்மீக மன்றம், இனஎழுச்சி மன்றம், எழுத்தாளர் மன்றம்.

    பாவைக்கூத்து, தெருக்கூத்து, மண்ணிசைப் பொழிவு, மக்களிசைப் பொழிவு, கரகாட்டம், ஒயிலாட்டம், நடன மேடை, நகைச்சுவை மேடை, கருத்தைக் கவரும் கவின்மிகு மேடை... என வருடம் நெடுக வசந்த விழாக்கள் நடைபெறும்.

    மொத்தம் 53 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும். தொடக்க விழா மட்டும் வருகிற 4-ந்தேதி (ஞாயிறு) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) நிறைவு பெறும்.

    தொடக்க நாள் நிகழ்ச்சி இன்முகத் தலைவரை பாடும் இசைபடு கவியரங்கம் என்ற தலைப்பில் குருநானக் கலைக்கல்லூரி அரங்கில் நடக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல்களை பாடகர்கள் அனந்து, ஸ்ரவன், ஹரித்தா, விஜயலட்சுமி, டாக்டர் கற்பகம் ஆகியோர் பாடுகிறார்கள். இசை பரத் வாஜ்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் கலைஞரின் நிலைத்த புகழுக்கு காரணம் தாராள மனமே, போராடும் குணமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு கலைஞர் வழங்கியது ஒளிரும் தன் மானமே, மலரும் நலத்திட்டங்களே என்ற தலைப்பில் பட்டிமன்றத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    இதுதவிர கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், சேவை திட்ட முகாம்களும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×