search icon
என் மலர்tooltip icon

    அர்ஜென்டினா

    • உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
    • அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.

    அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

    அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.

    அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
    • விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).

    கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.

    அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.

    ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • அர்ஜென்டினாவில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
    • புயல் பாதிப்பால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியால், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை அடித்து தள்ளியது.

    மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.

    அர்ஜென்டினா நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றிய போது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராகி இருக்கிறார். இவர் பதவி ஏற்க சென்ற போது ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஹபியர் பிலேவுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் உண்டு.

    பதவி ஏற்க சென்ற போது வாகனத்தை நிறுத்தி ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து ஜேவியர் மிலே அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.

    • அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
    • உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.

    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

    இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் நடிகை சில்வினா லூனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். சில்வினா லூனா, பிளாஸ் டிக் சர்ஜரிக்காக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை அணுகியுள்ளார்.

    அறுவை சிகிச்சையின் போது சில்வினாவுக்கு அர்ஜென்டினா அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை செலுத்தியதாகவும் இதனால் அவர் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அனிபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.
    • எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்

    ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.

    தனக்கு கிடைக்கும் வருமானங்களை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

    இந்நிலையில், அர்ஜென்டினாவிற்கு சென்ற அல்கபா, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்தார். ஜூலை 19 அன்று அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டடு, அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் இன்ஜெனிரோ பட்ஜ் எனும் இடத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனாதையாக கிடந்த ஒரு சிகப்பு சூட்கேஸ் பெட்டியை கண்டனர்.

    இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்பெட்டியை பார்த்தபோது கண்டதுண்டமாக வெட்டப்பட்ட ஒரு உடல் இருந்தது.

    அந்த உடலில் இருந்த பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளங்களை கொண்டு இது அல்கபாவின் உடல் என கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அல்கபா துப்பாக்கியால் சுடப்பட்ட பின், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    கிரிப்டோ கரன்சியின் தற்போதைய வீழ்ச்சியினால் அல்கபா பொருளாதார சிக்கல்களை சந்தித்து வந்ததாக அவரின் சகோதரர் ரொடால்ஃபோ தெரிவித்தார்.

    அல்கபா எழுதியிருக்கும் கடைசி குறிப்பு ஒன்றில், "கிரிப்டோ முதலீடுகளில் நான் கணிசமாக பணம் இழந்துள்ளேன். அர்ஜென்டினாவில் உள்ள வன்முறை கும்பலான பர்ரா ப்ராவா குழுவினரிடமிருந்து கடன் வாங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்" என தெரிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இன்று காலை 8.35 மணிக்கு பூமிக்கு அடியில் 169 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரசிகர் இறந்ததையடுத்து கால்பந்து கிளப் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    அர்ஜென்டினாவில் நேற்று ரிவர் பிளேட், டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்சில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த 53 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர், கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். ஆனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் காரணமாக, முதலில் மருத்துவ எமர்ஜென்சி என கூறி போட்டி 14 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் ரசிகர் இறந்தது தொடர்பாக நடுவர் அறிவித்ததும், போட்டி மேலும் 27 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    மேலும் ஒருநாள் முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    • தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

    பியூனெஸ் அயர்ஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
    • அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயதான டியாகோ பாரியா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாரியா, காணாமல் போன அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரை அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், பாரியாவின் வாகனம் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில், பாரியா காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அருகில் மூன்று சுறாக்கள் கிடப்பதாகவும், அவை பிரித்தெடுக்கம்போது, மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாக துண்டுகளை சேகரித்தனர். பின்னர், சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கேகரிக்கப்பட்ட உடல் பாகங்களில் இருந்த கையில் தனித்துவமான டேட்டூ இருப்பதை கண்டு, அது பாரியாதான் என்று அடையாளம் கண்டனர்.

    இருப்பினும், அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    மேலும், பாரிய எப்படி தண்ணீரில் மூழ்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
    • இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

    பார்சிலோனா:

    அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர்.

    கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

    இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை.

    செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது.

    அதுமட்டுமின்றி தகவல் தொடர்பு என்ற எல்லையை தாண்டி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் கலை களஞ்சியமாகவும் மாறிவிட்டது.

    தொலைதொடர்புக்காக மட்டுமே தொடங்கப்பட்ட செல்போன் இன்று உலக தகவல்களையும் அறிந்து கொள்ளும் சாதனமாக மாறிபோனது. அதோடு செல்போன் மூலம் பல தீய செயல்களும் நடக்கிறது.

    ஆபாச படங்களை பிறருக்கு தெரியாமல் பதிவு செய்வது, உரையாடல்களை பதிவு செய்வது, அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது போன்றவையும் நடக்கிறது.

    செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு இப்போது 94 வயதாகிறது. செல்போனின் இப்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, செல்போனின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

    இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும், இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

    • அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

    பியூனெஸ் அயர்ஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கார்போடா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

    சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    ×