search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

    • தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம், காஞ்சி தர்மம் நடக்கிறது.
    • நாளை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடக்கிறது.

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அம்மன் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது.

    விழாவின் 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம், காஞ்சி தர்மம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசை, 8.45 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை, 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்தா கேந்திரா தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வசதியாகவும், சுற்றுலா பயணிகளும் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வசதியாகவும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×