search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தோள்பட்டைக்கு கம்பீரத் தோற்றத்தை தரும் டம்பிள்ஸ் பயிற்சிகள்...
    X

    தோள்பட்டைக்கு கம்பீரத் தோற்றத்தை தரும் டம்பிள்ஸ் பயிற்சிகள்...

    • பரந்து விரிந்த தோள்பட்டைகள் அழகிய மற்றும் கம்பீரத் தோற்றத்தை தருபவை.
    • அழகிய தோள்பட்டைக்கு செய்ய வேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம்.

    ஆண், பெண் இருவருக்குமே பரந்து விரிந்த தோள்பட்டைகள் அழகிய மற்றும் கம்பீரத் தோற்றத்தை தருபவை. உடற்பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கும் பின்வரும் தோள் பட்டை பயிற்சிகளை டம்பிள்ஸ் வைத்து செய்வதன் மூலம் தோள்களில் இருக்கும் 14 வகை தசைகளையும் நெகிழ்வுத்தன்மையோடு வைத்துக் கொள்ள முடிவதோடு, கம்பீர தோற்றத்தையும் பெற முடியும்.

    Elbow Squeeze Press

    உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்திற்கு வைத்து நிற்கவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை பிடித்துக் கொண்டு, முன்கைகள் தோள்பட்டைக்கு நேர்க் கோட்டில் இருக்குமாறு கைமுட்டியை பக்கவாட்டில் மடக்கி வைக்க வேண்டும். மெதுவாக கைகளை முட்டி மடக்கிய நிலையிலேயே மார்பிற்கு நேராக கொண்டு வரவேண்டும்.

    இப்போது கைகளை தலைக்கு மேல் தூக்கி டம்பிள்ஸை பிடித்து நிற்க வேண்டும். 1 நிமிடம் கழித்து, மெதுவாக கைகளை கீழே இறக்கவும். இப்பயிற்சியை செய்யும்போது வளையாமல் முதுகு நேராகவும், மார்பு விரிந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். முழங்கை 90 டிகிரிக்கு மடங்கி தோள்பட்டை, கைகள் நேர்க் கோட்டில் இருக்க வேண்டும்.

    பலன்கள்

    இப்பயிற்சியின்போது மார்பு விரிவடைந்து கொடுப்பதால் நல்ல வலுகிடைக்கிறது. மேல் முதுகு தசைகளும் விரிவடைகிறது. முன்கை தசைகள், தசைநார்கள் நெகிழ்ச்சி அடைகின்றன. தோள், முதுகு, மார்பு, பின்புறம் என அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து செய்வதால், ஒரு முழுமையான தோற்றத்தை பெற முடியும்.

    Shoulder to Shoulder

    ஒரு டம்பிள்ஸை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கால்களை அகட்டி நிற்கவும். வலது கை முட்டியை மடக்கி டம்பிள்ஸை வலது தோளில் வைக்க வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தலைக்கு மேல் கொண்டு வந்து நிற்கவும். 1 நிமிடம் வரை அதே நிலையில் வைத்திருந்து இடது பக்கமாக டம்பிள்ஸை கொண்டு வந்து வலப்பக்கம் செய்தது போலவே இடப்பக்க தோள்பட்டையில் வைக்கவும். இதேபோல் இருபக்கமும் மாற்றி செய்யலாம். இப்பயிற்சியை செய்யும்போது மார்பு நன்றாக விரிவடைந்த நிலையிலும், பின்பக்கம் வளையாமல் நேர்க்கோட்டிலும் இருக்க வேண்டும். கழுத்தை இறுக்காமல் நெகிழ்வாக வைத்துக் கொள்ளவும். தோளில் வைக்கும்போது முட்டியை மடக்கி நன்றாக உடலோடு ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

    பலன்கள்

    தோள்களில் அழுத்தம் கொடுத்து செய்யும் இப்பயிற்சியால் தோள்பட்டை எலும்புகள், தசைகள் இரண்டும் நன்கு வலிமை அடைகின்றன. மேலும், தோள் தசை நார்களுக்கு நல்ல நெகிழ்ச்சி கிடைப்பதால், இலகுவாக தோளை அசைத்து வேலை செய்ய முடிவதோடு, தோளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. நீண்ட நேரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தோள்பட்டை வலிக்கு நல்ல தீர்வாகிறது.

    Next Story
    ×