என் மலர்
சத்தீஸ்கர்
- ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
- அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர் :
சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.
இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2
- கர்ப்பிணி பெண் ஒருவரையும் போலீசார் அடித்து உதைத்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
- போலீசார் பெண்களை தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டம் தில்சிவா கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக வீடுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக நாங்கள் இந்த வீடுகளில் வசித்து வருகிறோம். இதனால் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என அவர்கள் ஆவேசத்துடன் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெண்களில் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பெண்களை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காலால் அவர்களை எட்டி உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்ப்பிணி பெண் ஒருவரையும் போலீசார் அடித்து உதைத்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். வரு வாய் துறை அதிகாரிகளை தாக்கியதாக சிலரை போலீசார் வலுக்கட்டயமாக போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் பெண்களை தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
- மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
பிஜாப்பூர்:
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதால், மக்கள் தங்களிடம் இருக்கும் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை துரத்திப்பிடித்த போலீசார், அவர்களை சோதனையிட்டனர். இதில் அவர்களிடம் ரூ.6 லட்சத்துக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 11 வங்கி கணக்குப்புத்தகங்களும் இருந்தன.
இந்த பணம் நக்சலைட்டு தளபதி மல்லேசுக்கு சொந்தமானது எனவும், அதை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே ரூ.2 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.
- செல்போனை எடுப்பதற்காக கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை அதிகாரி வெளியேற்றினார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுக்க அவர் முயற்சி மேற்கொண்டார். அணையில் இறங்கி செல்போனை தேடும்படி உத்தரவிட்டார். ஆனாலும் செல்போன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வந்தார். கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை வெளியேற்றினார். இறுதியில் செல்போன் கிடைத்தது. ஆனாலும் அது வேலை செய்யவில்லை.
செல்போனுக்காக அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியின் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ராஜேஷ் விஸ்வாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அமர்ஜித் பகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அணையின் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா ஷுக்லா உத்தரவிட்டுள்ளார்.
- சிலர் நடனமாடுவதை பார்த்து உற்சாகம் அடைந்த திலீப்பும் சேர்ந்து அவர்களுடன் நடனமாடி உள்ளார்.
- மேடையில் ஆடிக் கொண்டிருந்த திலீப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப்ராவுஸ்கர்.
மின் ஊழியரான இவர் ராஜ்நந்கான் மாவட்டத்தில் உள்ள டோன்கர்கர் என்ற பகுதியில் கடந்த 5-ந்தேதி இரவு நடைபெற்ற தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்றார்.
அப்போது அங்கு சிலர் நடனமாடி உள்ளனர். இதை பார்த்து உற்சாகம் அடைந்த திலீப்பும் சேர்ந்து அவர்களுடன் நடனமாடி உள்ளார்.
அப்போது மேடையில் ஆடிக் கொண்டிருந்த திலீப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் திலீப்பை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திலீப் இறந்து விட்டதாக கூறினர்.
இந்நிலையில் மேடையில் திலீப் நடனமாடுவதும், அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
- தொழிற்சாலைகளில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
- மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது.
இதன் கட்டுப்பாட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடைபெற்று உள்ளதாக வருமானவரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் மாநில தொழில் மற்றும் வர்த்தகதுறை செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்ட சிலர் மீது புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் மதுபான தொழில் அதிபர் அன்வர் தேபார் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு விசாரணையின் போது அமலாக்க துறை சார்பில் கூறப்பட்டுள்ள தாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் மாநிலத்தில் மொத்த மது விற்பனையில் 30 முதல் 40 சதவீதம் வரை சட்ட விரோதமாக நடத்தப்பட்டுள்ளது.
மது பானங்களை விற்பதற்காக குறிப்பிடத்தக்க கமிஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை. அதாவது தொழிற்சாலை களில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு வருமான வரி, கலால் வரி போன்றவை செலுத்த வேண்டியது இல்லை. அந்த வகையில் 2 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளது. இதற்கு மூளையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா செயல்பட்டுள்ளார்.
தொழில் அதிபர் அன்வர் தேபார் இந்த மோசடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இவர் காங்கிரசை சேர்ந்த ராய்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் ஆவார். மோசடியில் கிடைத்த பணத்தை அன்வர் தேபார், அனில் துதேஜா ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளனர். இந்த பணம் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையில் வெளியாகி உள்ள இந்த தகவல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நான்கு மாவோயிஸ்டுகளையும் சிறையில் அடைத்த நீதிமன்றம், சிறார்களை சிறார் இல்லத்திற்கு அனுப்பியது.
- குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். மேலும், மூன்று சிறுவர்கள் சிறார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) யின் தர்பா பிரிவின் கீழ் உள்ள மலங்கேர் பகுதி கமிட்டியை சேர்ந்த புத்ரா மத்வி, ஜிதேந்திர முச்சாகி, ஹித்மா மட்கம் மற்றும் ஹித்மா மத்வி என நான்கு மாவோயிஸ்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் புத்ரா மத்வி, முச்சக்கி மற்றும் ஹித்மா மட்கம் ஆகியோர் வெள்ளிக்கிழமையும், ஹித்மா மத்வி நேற்றும் கைது செய்யப்பட்டனர்.
15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று இளம்வயது சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு சிறையில் அடைக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவோயிஸ்டுகளையும் சிறையில் அடைத்த நீதிமன்றம், சிறார்களை சிறார் இல்லத்திற்கு அனுப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- கார் பலோட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.
- விபத்தில் காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானது.
பலோட்:
சத்தீஸ்கர் மாநிலம் தாம் தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தை சேர்ந்தவர்கள், கன்கேர் மாவட்டம் மார்க டோவா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த கார் பலோட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.
இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானது.
இந்த விபத்தில் பலியானவர்களில் 5 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது.
- சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சரண் அடைந்து தாங்கள் திருந்தி வாழபோவதாக தெரிவித்தனர். மற்ற மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த 2 லாரிகளுக்கும் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். இதில் அந்த லாரிகள் முற்றிலும் எரிந்து சேதமானது.
- போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
- உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 10 போலீஸ்காரர்கள், போலீசார் சென்ற வாகனத்தின் டிரைவர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் 50 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பயன்படுத்தி உள்ளனர். இதனால் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் போலீசார் வந்த வாகனம் 20 அடி தூரத்தற்கு தூக்கி வீசப்பட்டு சின்னாபின்னமாக சிதைந்தது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நின்றிருந்த சில மரங்கள் வேருடன் சாய்ந்தன.
மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர். ரோந்துப் பணி முடிந்து திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.