search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    23-ந்தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடக்கம்: பசவராஜ் பொம்மை  அறிவிப்பு
    X

    பசவராஜ் பொம்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்தபடம்.

    23-ந்தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடக்கம்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு

    • அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழு திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    அதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

    கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இந்த குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் வெற்றி பெறும். அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் தொழில் அதிக வருவாய் ஈட்டும் நிலை இருந்தால் அத்தகைய குழுக்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆண் சுயஉதவி குழுக்கள் திட்டம் வருகிற 23-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 509 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 ஆயிரத்து 393 குழுக்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்திற்கு தலா 2 குழுக்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா, அத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜினீஸ், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என். பிரசாத், திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×