search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சி போலி வாக்குறுதிகளை அளிக்கிறது: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
    X

    காங்கிரஸ் கட்சி போலி வாக்குறுதிகளை அளிக்கிறது: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு

    • சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். அதனால் எந்த தாக்கமும் இங்கு ஏற்படவில்லை. அதேபோல் தற்போது ராகுல் காந்தி பெலகாவிக்கு வந்து சென்றுள்ளார். அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக கூறி இருக்கிறார். இந்த போலி வாக்குறுதிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    லண்டனில் அவர் நமது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இது தேச விரோத செயல். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அதனால் ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, 24, 26-ந் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதி உத்தரவாத அட்டையை வழங்குகிறார். இது போலி அட்டை. பிற மாநிலங்களில் காங்கிரசார் இவ்வாறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. அதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை காங்கிரசார் ஏமாற்றுகிறார்கள்.

    ஊழல் தொடர்பாக சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியா?. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற 59 ஊழல்கள் குறித்து நீதி விசாரணை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.

    உரிகவுடா, நஞ்சேகவுடா குறித்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்தால் அதன் மூலம் வெற்றி கிடைக்கும். உண்மை தகவல்களை பெற அதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வரலாற்றை இந்தியாமற்றும் கர்நாடகத்தில் திரித்துள்ளனர். வரலாற்றை திரித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையை சொன்னால் அவர்களால் சகித்து கொள்ள முடிவது இல்லை.

    எங்கள் கட்சியில் இருந்த பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி., காங்கிரசில் சேர்ந்துள்ளார். குருமித்கல் தொகுதியில் பா.ஜனதா பலமாக உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    Next Story
    ×