search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
    X

    மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

    • கேரளாவில் உள்ள 20 தொதிகளுக்கும் ஒரே நேரத்தில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு.
    • கர்நாடகா மாநிலத்தில் 14 இடங்களில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 102 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    2-ம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (26-ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

    கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனிராஜா, பா.ஜ.க சார்பில் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பா.ஜ.க சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும், திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுரேஷ்கோபியும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 3 தொகுதிகளும் நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளன. இதனால் திருவனந்தபுரம், வயநாடு, திருச்சூர் தொகுதிகளின் முடிவை அனைவரும் எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அங்கும் இன்று பிரசாரம் ஓய்ந்தது.

    மேலும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    இறுதி கட்ட பிரசாரம் முடிந்துள்ள நிலையில் கேரளா உள்பட 12 மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதி என மொத்தம் 89 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள்:

    அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, கர்நாடகா-14, கேரளா-20, மத்திய பிரதேசம்-7, மராட்டியம்-8, ராஜஸ்தான்-13, திரிபுரா-1,

    உத்தர பிரதேசம்-8, மேற்கு வங்காளம்-3, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1

    Next Story
    ×