search icon
என் மலர்tooltip icon
    • குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம்.
    • இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    பேரீச்சம் பழம் - 10

    பாதாம் - 20

    பிஸ்தா - சிறிதளவு

    முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)

    ஐஸ் கட்டிகள்

    குங்குமப்பூ - அலங்கரிக்க

    செய்முறை

    * வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.

    * பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.

    * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    * கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    * பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும்.
    • செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம்.

    அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம்.

    பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

    பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.

    தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர்.
    • சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. இதன் மூலம் அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும். குழந்தைகள் வெளிப்புறங்களில் இருக்கும்போதும், விளையாடும்போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பலரும் போதுமான கவனம் செலுத்துவதில்லை. இதனால் சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர். இதைத் தவிர்க்க, சிறு வயதிலேயே அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சாலை பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விபத்துகள், காயங்கள், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் போன்றவற்றை பற்றி அதிக அளவில் எடுத்துக்கூறி அவர்களை பயமுறுத்தக்கூடாது. போக்குவரத்து விதிகளை பயமின்றி அறிந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு வேடிக்கையாக கற்பிக்க வேண்டும்.

    சிக்னல்களின் அவசியம்: அடிப்படை போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சிக்னல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது. நடந்து செல்லும்போது சாலையை கடப்பதற்கு பாதசாரிகளுக்கான பாதையை (ஜீப்ரா கிராசிங்கை) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பச்சை விளக்கு எரியும்போது செல்வது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்பது, மஞ்சள் விளக்கு எரியும்போது வேகத்தை குறைப்பது ஆகியவை முக்கியமான விதிகள் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

    சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்பு: குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும். இரவில் சைக்கிளைப் பயன்படுத்தினால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்கு சரியாக இயங்குகின்றதா? என்று பார்க்கவும். சாலையில் செல்லும்போது, சைக்கிளுக்கான பாதையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பாதை இல்லாத பகுதியில், சாலையின் ஓரமாக செல்ல அறிவுறுத்த வேண்டும். பரபரப்பான தெருக்களில் பெற்றோர் தங்கள் மேற்பார்வையின்றி குழந்தைகளை சைக்கிள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது.

    அவசரம் வேண்டாம்: சாலையை கடக்கும்போது இடப்புறமும், வலப்புறமும் பார்த்து கவனமுடன் செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்தால் அவற்றுக்கு வழிவிட வேண்டும். வாகனம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? என்பதை உரத்த ஒலி அல்லது மெல்லிய ஒலியைக் கொண்டு எப்படி வேறுபடுத்திக் கண்டறிவது என்பது குறித்தும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சாலையைக் கடக்கும்போது, நிதானமாக நடந்து கடப்பது முக்கியம், அவசரமாக ஓடி கடக்கக்கூடாது எனவும் கற்றுத்தருவது அவசியம். சாலை விதிகளை செயல்முறை விளக்கமாகப் பெற்றோர் பயிற்சி அளித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைக்க முடியும்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.

    இரவு 8.30 மணிக்கு நற்பணி சபை பொன்விழா மலர் வெளியீடு நடக்கிறது. நிகழ்ச்சியில் மாதா கெபி, புதிய இல்லம் கட்ட முயற்சி எடுத்த தொழில் அதிபர் த.ஜான்சனை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பாராட்டி கவுரவிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, தொழில் அதிபர் எஸ்.டி. வேலு, வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 28-ந் தேதி அதிகாைல 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் மரிய ஆல்பின் லியோன், பாலன் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    • வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
    • திருப்பதியைச் சேர்ந்த பக்தர் கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை தங்க விமான கோபுரம் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    கோவில் மூலவர் சன்னதி, கோவில் வளாகத்தில் உள்ள இதர சன்னதிகள், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரிமஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியைச் சேர்ந்த பக்தரும், காணிக்கையாளருமான மணி என்பவர் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார். அந்தத் திரைச்சீலைகளை கோவில் உதவி அதிகாரி ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்தது. தற்போது பணகள் நிறைவடைந்துள்ளது. சட்டை நாதர் கோவிலில் உள்ள 4 கோபுர வாசல்களில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. மற்ற 3 கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது.

    தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீர் தெளிக்கப்பட்டு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் சென்றனர். 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க தலைவர் மார்க்கோனி, கோவில் திருப்பணி உபயதாரர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, பொறியாளர் செல்வகுமார், கோவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    • சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு.

    இதை பிரதிபலிக்கும் வகையில் பழனி முருகன் கோவில் உட்பிரகாரத்தில் போகருக்காக தனி சன்னதி உள்ளது. இங்கு புலிப்பாணி ஆசிரம நிர்வாகம் சார்பில் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம். போகர் சன்னதியில் பிரசித்தி பெற்ற பச்சை மரகத லிங்கம் உள்ளது.

    ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு போகர் ஜெயந்தியையொட்டி நேற்று பழனி கோவில் போகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 14 பக்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஆயக்குடி அருகே பொன்னிமலை அடிவாரத்தில் உள்ள போகர் சித்தர் கோவிலில், போகர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. முன்னதாக போகர் சித்தருக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிவேல், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பொன்னிமலை பகுதியில் விதைப்பந்து மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    • இன்று இரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    விழாவையொட்டி நேற்று இரவு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் நடந்தது. இதற்காக தேரடி தெரு, சன்னதி தெரு சந்திப்பில் வண்ணாரமாரியம்மன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிடா வெட்டி பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து ஏராளமான பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியபடி லாரன்ஸ்ரோடு, வண்டிப்பாளையம் சாலை, திருவந்திபுரம் சாலை, போடிச்செட்டி தெரு சந்திப்பு ஆகிய 4 திசைகளிலும் குறிப்பிட்ட தூரம் ஓடிச்சென்று மீண்டும் தேரடி தெருவுக்கு வந்தனர்.

    பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது. 24-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் திருவிழா, 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றம், தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா, 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. மறுநாள் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, 5-ந்தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’
    • இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.

    மதங்கரிடம் நாரத முனிவர், "பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை 'பலாச வனம்' என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்" என்றார்.

    நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை "சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்" என சபித்தார் முனிவர்.

    பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், "நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்" என அருளினார்.

    மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். "மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார் மகாவிஷ்ணு.

    அதற்கு முனிவர் "தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்" என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

    மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.

    மதங்கர், "நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் 'மதங்கேசர்' என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

    காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

    தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    இரட்டை நந்திகள்

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடை விடுமுறை காரணாமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் காம்ளக்சில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.

    மேலும் தரிசன நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் செயல்அதிகாரி தர்மா அறிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 66,820 பேர் தரிசனம் செய்தனர். 36,905 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×